சின்னமலை-ஏஜி-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் சோதனை ஓட்டம்


சின்னமலை-ஏஜி-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 20 July 2017 10:45 PM GMT (Updated: 2017-07-21T00:34:36+05:30)

சென்னை மெட்ரோ ரெயில் சேவைக்காக சின்னமலை - ஏஜி-டி.எம்.எஸ். இடையே 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு நிறைவடைந்த சுரங்கப்பாதையில் சோதனை ஓட்டம் நடந்தது.

சென்னை,

சென்னை நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர், திருமங்கலம், கோயம்பேடு, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், நங்கநல்லூர் ரோடு, மீனம்பாக்கம், விமான நிலையம் ஆகிய 17 ரெயில் நிலையங்கள் வழியாக தற்போது மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

அதேபோல் விமான நிலையத்தில் இருந்து கிண்டி, சின்னமலை இடையேயும், ஆலந்தூர்-பரங்கிமலை இடையேயும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அண்ணாசாலையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு நேற்று டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது. நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கொடியசைத்து இதனை தொடங்கி வைத்தார்.

சின்னமலை ரெயில் நிலையத்தில் இருந்து சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, ஏஜி-டி.எம்.எஸ். வரை உள்ள 4 ரெயில் நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

சுரங்கத்துக்கு காற்று செல்லும் பாதை, சிக்னல்கள், நடைமேடை, தண்டவாளம் இருக்கும் பகுதியை மறைத்திருக்கும் கதவுகள், டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் பகுதியில் உள்ள கதவுகள் உள்ளிட்ட நிறைவடைந்த அனைத்து பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன. பணிகள் திருப்திகரமாக உள்ளன. இதுகுறித்து பாதுகாப்பு ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

இந்தப்பாதையில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவார். பின்னர் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின் பேரில் இந்தப்பாதையில் விரைவில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.  இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


Next Story