கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
கொடுங்கையூர் தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பேக்கரியின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர் உயிரிழந்தனர்.
சென்னை,
கொடுங்கையூர் மீனாம்பாள் நகரில் உள்ள ஒரு பேக்கரியில் கடந்த 11-ந் தேதி நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தின் போது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட போது உள்ளே இருந்த சிலிண்டர் வெடித்தது. அப்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் தீயில் கருகி பலியானார். மேலும் 3 தீயணைப்பு வீரர்கள், 6 போலீசார்கள் உள்பட 48 பேர் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். இவர்கள் அனைவருக்கும் ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தீ விபத்தில் படுகாயம் அடைந்த பரந்தாமன் மற்றும் அபிமன்யூன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் தீயில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பேக்கரியின் உரிமையாளர் ஆனந்தன், அவருடைய உறவினரான மகிலவன்(18) சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்த இவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story