உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி 7–ந்தேதி கோட்டைக்கு பா.ஜ.க. பேரணி
உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி 7–ந்தேதி பா.ஜ.க.வினர் கோட்டை நோக்கி பேரணி நடத்துவார்கள் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார்.
சென்னை,
இதனைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:–
‘நீட்’ தேர்வு தமிழகத்துக்கு நிச்சயம் தேவை தான். ‘நீட்’ தேர்வை அனைத்து மாநிலங்களும் ஏற்றபோது, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு இருந்தாலும் தமிழகத்துக்கு ஒரு ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த ஒரு ஆண்டில் தமிழக அரசு எந்த செயல்திட்டத்தையும் தீட்டவில்லை. மாணவர்களையும் தயார்படுத்தவில்லை. பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கவில்லை.இப்போது மேலும் 3 ஆண்டுகள் வரை விலக்கு கேட்கிறார்கள். அது தவறாக தெரியவில்லையா? கொடுக்கப்பட்ட காலஅவகாசத்தையும் தவறவிட்டு, இன்னும் காலஅவகாசம் வேண்டும் என்றால் என்ன செய்யமுடியும்? அதேவேளையில் எழுப்பப்பட்ட கோரிக்கைகள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் பரிசீலனை செய்யப்படும்.
எனவே மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் நீட் தேர்வு விவகாரத்தில் போராடுவதை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு ஏன் மேற்கொள்ளவில்லை? என்று யோசிப்பது நல்லது.
உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி ஆகஸ்டு 7–ந்தேதி கோட்டை நோக்கி பேரணி செல்ல உள்ளோம். இதில் பா.ஜ.க.வினர் திரளாக பங்கேற்பார்கள்.செம்மொழி நிறுவனம் அங்கேயே தான் உள்ளது. வேறு எதுவும் நடந்துவிடவில்லை. பா.ஜ.க.வை பொறுத்தவரை நடக்காத ஒன்றை, நடந்ததாக கூறி குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது.
குட்கா–புகையிலை விற்பனை விவகாரத்தில் யாராக இருந்தாலும் தவறு செய்திருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அகில இந்திய சட்டக்கல்லூரி மாணவர் கூட்டமைப்பு தேசிய பொருளாளர் எம்.எஸ்.ஜே.ரஹ்மான் தலைமையிலும், அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் நிறுவனத்தலைவர் ஜே.செந்தில்ராஜா தலைமையிலும், மேல்மருவத்தூர் இளைஞர் மன்ற தலைவர் பிரகாஷ் தலைமையிலும், வடசென்னை தொழில் வர்த்தக சங்க நிர்வாகி பெப்சி சரவணன் தலைமையிலும், சினிமா டைரக்டர் எஸ்.டி.வேந்தன் தலைமையிலும், மாநகராட்சி முன்னாள் தலைமை பொறியாளர் பெருமாள் தலைமையிலும் 500–க்கும் மேற்பட்டோர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் நேற்று தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டனர்.