கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு


கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
x
தினத்தந்தி 23 July 2017 12:34 PM IST (Updated: 23 July 2017 12:34 PM IST)
t-max-icont-min-icon

கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.



பெரம்பூர்,  



கொடுங்கையூர் மீனாம்பாள் நகரில் உள்ள ஒரு பேக்கரியில் கடந்த 11-ந் தேதி நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தின் போது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட போது உள்ளே இருந்த சிலிண்டர் வெடித்தது. அப்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் தீயில் கருகி பலியானார். மேலும் 3 தீயணைப்பு வீரர்கள், 6 போலீசார்கள் உள்பட 48 பேர் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பேக்கரிகடை உரிமையாளர் ஆனந்தன் உள்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.
நேற்று மாலை கொடுங்கையூர் சோலையம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் (36) செம்பியம், முகுந்தம்மன் நகரை சேர்ந்த பாஸ்கர் (38) ஆகியோர் இறந்தனர். இதனால் பேக்கரி தீவிபத்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் தீ விபத்தில் காயம் அடைந்து ராய புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் (27) இன்று காலை பரிதாபமாக இறந்தார். அவரது சொந்த ஊர் மதுராந்தகம்.

எலக்ட்ரீசியனான பார்த்திபன், கொடுங்கையூரில் அண்ணன் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். பேக்கரியில் தீவிபத்து ஏற்பட்டபோது அவர் வேடிக்கை பார்க்க சென்று உள்ளார். சிலிண்டர் வெடித்து சிதறியபோது தீயில் பார்த்திபன் சிக்கிக் கொண்டார். அவருக்கு 60 சதவீதம் தீக்காயம் இருந்தது. கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 12 பேருக்கும், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 10 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள 3 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.

எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. லேசான காயம் அடைந்தவர்கள் பலரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story