புதிய நிர்வாகிகள் நியமனம் செல்லாது; சூழ்ச்சிகள், அநியாயங்கள் செய்து அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க சதி
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது.
சென்னை,
இந்த அணியை சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஆனால் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை தீவிரமாக ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதனால் அ.தி.மு.க (அம்மா) அணியில் மோதல் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் கடந்த 4–ந் தேதி திடீரென்று புதிய நிர்வாகிகளை நியமித்தார். எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் என 60 பேருக்கு பல்வேறு பதவிகளை வழங்கினார்.ஆனால் அவர் இவ்வாறு புதிய நிர்வாகிகளை நியமித்தற்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அ.தி.மு.க. (அம்மா) அணியில் தனது பலத்தை அதிகரிக்கும் நோக்கத்திலேயே டி.டி.வி.தினகரன் புதிய நிர்வாகிகளை நியமித்து, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடியை கொடுப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு நேற்று சென்னை திரும்பிய நிதி மற்றும் மீன்வள துறை அமைச்சர் டி.ஜெயகுமார் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க சதி நடப்பதாக அவர் பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.பேட்டியின் போது அவர் கூறியதாவது:–
1½ கோடி தொண்டர்களோடு இந்த இயக்கம், இப்போது சீரான முறையிலே, சிறப்பான முறையிலே முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.எனவே, இதற்கு இடையூறு விளைவிக்க வேண்டும் என்கின்ற வகையில் யாராக இருந்தாலும் சரி. அதாவது ‘ஏ’ ஆக இருந்தாலும் சரி, ‘பி’ ஆக இருந்தாலும் சரி. ‘ஏ’ யார் என்று புரிந்துகொள்வீர்கள். ‘பி’ யார் என்று புரிந்துகொள்வீர்கள்.
ஆட்சியை கலைக்க வேண்டும். ஆட்சியை வீட்டுக்கு போகச்செய்ய வேண்டும் என்று நினைத்து, அதற்கு உண்டான எல்லாவிதமான அநியாயங்களை செய்தால், சூழ்ச்சிகளை செய்தால் நிச்சயம் ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை மன்னிக்கவே மன்னிக்காது. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்கின்ற துரோகிகளை இந்த நாடே மன்னிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.