மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்ததால் பூந்தமல்லி நெடுஞ்சாலை 6 ஆண்டுகளுக்கு பின்னர் இருவழி பாதையாக மாற்றம்


மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்ததால் பூந்தமல்லி நெடுஞ்சாலை 6 ஆண்டுகளுக்கு பின்னர் இருவழி பாதையாக மாற்றம்
x
தினத்தந்தி 7 Aug 2017 5:15 AM IST (Updated: 7 Aug 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்ததால் 6 ஆண்டுகளுக்கு பின்னர் பூந்தமல்லி நெடுஞ்சாலை நேற்று முதல் இருவழி பாதையாக மாற்றப்பட்டது.

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்துவருவதால் அண்ணாசாலை மற்றும் பூந்தமல்லி சாலையில் பல்வேறு இடங்கள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டன. இதனால் வாகனங்கள் ஒருசில கிலோ மீட்டர் தூரம் மாற்றுப்பாதைகளில் சுற்றிச்செல்லும் நிலை உள்ளது. போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.

தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்த சாலைகளில் வழக்கம்போல் போக்குவரத்து தொடங்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணிக்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேரு பூங்காவில் இருந்து சேத்துப்பட்டு ஏரி (ஈகா தியேட்டர்) வரை 2011–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. இதனால் இந்த பகுதியில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு மையம் ஆகியவற்றுக்கு செல்வதில் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.

தற்போது இந்தப்பாதையில் சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்து ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே நேரு பூங்கா முதல் சேத்துப்பட்டு ஏரி வரை தற்போது உள்ள ஒருவழிப் பாதையை இருவழிப் பாதையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் நேற்று முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்த பகுதி இருவழிப் பாதையாக மாற்றப்பட்டது.

சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறும்போது, ‘‘மெட்ரோ ரெயில் பணிக்காக எடுக்கப்பட்ட சாலைகளில் பணிகள் நிறைவடைந்த உடன் ஏற்கனவே இருந்ததுபோல சீரமைத்து மீண்டும் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. நேரு பூங்கா முதல் சேத்துப்பட்டு ஏரி வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்ததால் அந்த சாலை சீரமைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாலை இருவழிப் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் சாலையின் நடுவே தடுப்புசுவர், சிக்னல்கள் இன்னும் அமைக்கப்படாததால் இப்பகுதியில் கூடுதல் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். விரைவில் அவைகள் அமைக்கப்பட்டு இந்த சாலை முழு அளவில் பயன்பாட்டுக்கு வரும்’’ என்றார்.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story