மணல் குவாரிகளில் இருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளிச்செல்லும் லாரிகளை பிடிக்க திட்டம்


மணல் குவாரிகளில் இருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளிச்செல்லும் லாரிகளை பிடிக்க திட்டம்
x
தினத்தந்தி 8 Aug 2017 3:45 AM IST (Updated: 8 Aug 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

மணல் குவாரிகளில் இருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளிச்செல்லும் லாரிகளை பிடிப்பதற்காக பொதுப்பணித்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

சென்னை,

நடுத்தர வர்க்கத்தினரால் மணல் குவாரிகளில் இருந்து லாரிகள் மூலம் மணல் வாங்கி வீடு கட்டுவது என்பது முடியாத வி‌ஷயமாக மாறி வருகிறது. காரணம் ஆறுகளில் மணல் தட்டுப்பாடு காரணமாக ஒரு லோடு மணல் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் மட்டும் அல்லாது அதற்கு மேலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினரால் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதுடன், கட்டிட தொழிலும் முடங்கி கிடக்கின்றன.

கட்டிட தொழிலாளர்கள் மற்றும் லாரிகளில் பணியாற்றும் கூலி தொழிலாளர்களும் வேலைகளை இழந்து தவிக்கின்றனர். இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் பாறைகளை தூள் ஆக்கி ‘எம்.சான்ட்’ என்ற பெயரில் ஆற்று மணலுக்கு மாற்று மணலை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 100–க்கும் மேற்பட்ட உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த நிலையில் மணல் குவாரிகளில் இருந்து மணல் எடுக்கும் லாரி உரிமையாளர்கள் பொதுப்பணித்துறைக்கான ஆன்–லைனில் பதிவு செய்த பின்னர், குவாரிகளில் சென்று மணலை எடுத்து செல்கின்றனர்.

இதில் ஒரு சில லாரி உரிமையாளர்கள், ஒரே அனுமதி சீட்டை வைத்துக்கொண்டு, ஒரே பதிவு எண் கொண்ட பல லாரிகளில் குவாரிகளில் இருந்து திருட்டுத்தனமாக மணலை எடுத்து செல்வதாக பொதுப்பணித்துறைக்கு பல புகார்கள் வந்தன. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில் குவாரிகளில் மணல் திருட்டில் ஈடுபடும் லாரிகளை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மணல் எடுத்து செல்லும் லாரிகளின் ஆவணங்களை முதலில் சரிபார்க்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் பொதுப்பணித்துறை இறங்கி உள்ளது.

முறைகேட்டில் ஈடுபடும் மணல் லாரி உரிமையாளர்களை தடுக்கவும், அவர்களை விதிமுறைகளை பின்பற்ற வைக்கவும் மணல் லாரிகளை ஒழுங்குபடுத்துவதற்காக நேற்று முதல் வரும் 11–ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தினசரி காலை 10 மணி முதல் மாலை 5½ மணி வரை மாநிலம் முழுவதும் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகாமில் கலந்துகொள்வதற்கு முன்பாக, லாரி உரிமையாளர்கள் பொதுப்பணித்துறையின் ‘டிஎன் சான்ட்’ என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தில் லாரியின் புத்தக விவரம் (ஆர்.சி.புத்தகம்), லாரியின் அனுமதி சான்று (பெர்மிட்), வாகன தகுதிச் சான்று (எப்.சி.), சாலை வரி ரசீது மற்றும் காப்பீடு விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பின்னர் அந்த படிவத்தை தரவிறக்கம் (டவுன்லோடு) செய்து அதனுடன், அசல் ஆவணங்கள் மற்றும் அதனுடைய நகல்களை முகாமுக்கு எடுத்து வரவேண்டும். அந்த வகையில் சென்னையில் நடந்த முகாமில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (ஆர்.டி.ஓ.) (மேற்கு) பி.பாஸ்கரன், (வடக்கு) அசோக்குமார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் சுமார் 50 லாரிகளின் ஆவணங்களை சரிபார்த்து சான்று அளித்தனர்.

தவறான ஆவணங்களை கொண்ட வாகன உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், லாரிகளும் பறிமுதல் செய்யப்படும் என்று கூறப்பட்டது. சிறப்பு முகாமுக்கு லாரிகளை கொண்டு வரவேண்டியதில்லை என்றும் லாரி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக சென்னை கலெக்டர் வெ.அன்புச்செல்வன் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் தமிழக பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வெங்கடேஸ்வரலு, இணை போக்குவரத்து ஆணையர்கள் (தெற்கு) பி.ராமலிங்கம், (வடக்கு) ஏ.வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்வாறு லாரிகளின் முறையான ஆவணங்களை சரிபார்த்து பொதுப்பணித்துறை இணையதளத்திலும் பதிவு செய்யப்படும். சான்று பெற்ற லாரி உரிமையாளர்கள் குவாரிகளில் மணல் அள்ள செல்லும் போது, குவாரிகளில் லாரிகள் குறித்து பொதுப்பணித்துறை இணையதளத்தில் உள்ள ஆவணங்களையும் சரிபார்த்து சரியாக இருந்தால் மட்டுமே மணல் வழங்கப்படுகிறது. ஆவணங்கள் சரியாக இல்லாத வாகனங்களுக்கு வரும் காலங்களில் குவாரிகளில் மணல் வழங்குவது நிறுத்தப்படும். இதன் மூலம் திருட்டுத்தனமாக மணல் அள்ளும் லாரிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க முடியும். மணல் விலையும் குறைய வாய்ப்பு உள்ளது என்பது கூறிப்பிடத்தக்கது.


Next Story