சுதந்திர தினம் வருவதால் ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் 18–ந் தேதிக்கு ஒத்திவைப்பு


சுதந்திர தினம் வருவதால் ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் 18–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 8 Aug 2017 4:46 AM IST (Updated: 8 Aug 2017 4:46 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினம் வருவதால் போராட்டம் நடத்த அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் 18–ந் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க.வில் இரு அணிகள் இணைப்பு குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த அமைச்சர்கள் கூறிவந்தனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்தவர்கள், ‘‘அ.தி.மு.க. 2 அணிகள் இணைவதற்கு வாய்ப்பே இல்லை’’ என்று மறுத்துவிட்டனர்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், ‘தமிழக அரசு ஊழல் அரசு’ என்று வெளிப்படையாகவே அரசின் மீது குற்றம்சாட்டினார். மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் தமிழக அரசின் மீதான எதிர்ப்பை ஆர்ப்பாட்டத்தின் மூலம் காட்டுவது எனவும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, குடிநீர் தட்டுப்பாடு, டெங்கு காய்ச்சல், நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சினை, மாநகராட்சி நிர்வாக சீர்கேடு போன்ற பல்வேறு மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்து, வரும் 10–ந் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்ப்பாட்டத்திற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே போலீஸ் அனுமதி கோரப்பட்டிருந்தது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்குமாறு போலீசில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மனு கொடுத்திருந்தனர். ஆனால், எந்தவொரு பதிலும் வராத நிலையில், நேற்று மீண்டும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் சென்று மனு கொடுக்கப்பட்டது.

ஆனால், சுதந்திர தினத்தை காரணம் காட்டி, போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. அதாவது, சுதந்திர தினத்துக்கு ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே எந்தவொரு போராட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை என்று போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எனவே, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தனது போராட்ட திட்டத்தை சுதந்திர தினத்திற்கு பிறகு வைத்துக்கொள்வது என முடிவு செய்தனர். அதன்படி, 10–ந் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த போராட்டம் 18–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story