ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கிறோம்; எடப்பாடி பழனிசாமி பேட்டி
ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கிறோம் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,
சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–கேள்வி:– நீட் தேர்வில் இருந்து விலக்குபெற மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுமா?
பதில்:– மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு (நேற்று) கூட சுகாதாரத்துறை அமைச்சர் டெல்லி சென்று இருக்கிறார். அங்கு சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியை சந்தித்து, நீட் தேர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்குபெற மத்திய அரசுக்கு தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுத்து வருகிறோம்.
கேள்வி:– டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடும் அதிகம் உள்ளது. இதனை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?
பதில்:– தமிழகத்தில் 140 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி. மழைப்பொழிவே கிடையாது. இப்போது தான் ஆங்காங்கே மழை பெய்துகொண்டிருக்கிறது. இருந்தாலும் அந்தந்த பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிக்காக நிதி ஒதுக்கீடு செய்து, போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கேள்வி:– ஒன்றுப்பட்ட அ.தி.மு.க.வை எப்போது பார்க்கலாம்?
பதில்:– விரைவில் பார்ப்போம் என்று எதிர்பார்க்கிறோம்.
கேள்வி:– கேரளா, கர்நாடக, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் அணை கட்டும் முயற்சி எடுத்து வருகின்றன. ஆனால் தமிழக அரசு அணை கட்டுவதற்கு எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?
பதில்:– இது தவறான குற்றச்சாட்டு. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கையின்போது, ரூ.1,000 கோடியில் 3 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான தடுப்பு அணைகள் கட்டப்படும் என்று அறிவிப்பு கொடுத்து இருக்கிறோம்.
இந்த ஆண்டு தடுப்பு அணைகள் கட்டுவதற்கு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த பணிகள் விரைவில் தொடங்க இருக்கின்றன. எஞ்சிய ரூ.650 கோடி நிதியில் 2 ஆண்டுகளில் எங்கு எல்லாம் தடுப்பு அணைகள் கட்ட வேண்டும் என்று பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கோரிக்கைகள் வைக்கிறார்களோ, அங்கு எல்லாம் தடுப்பு அணைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும்.
கேள்வி:– சட்டசபையில் மக்கள் பிரச்சினை பற்றி விவாதிக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளாரே?
பதில்:– மானியக்கோரிக்கையில் பல்வேறு விவாதங்கள் நடந்தன. சட்டமன்றத்துக்கு வராதவர்களுக்கு அது தெரியாது. வந்தாரா? இல்லையா? என்று அவரிடம் (மு.க.ஸ்டாலின்) தான் நீங்கள் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.