கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 9 பேர் விடுதலை: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை


கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 9 பேர் விடுதலை: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 11 Aug 2017 7:00 PM GMT (Updated: 2017-08-11T22:55:27+05:30)

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 9 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., கூறியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

94 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான கும்பகோணம் தனியார் பள்ளிக்கூட தீ விபத்தில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேரை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து வழக்கில் சம்பந்தப்பட்டோரை காப்பாற்றுவதற்காக தொடக்கம் முதலே முயற்சிகள் நடைபெற்று வந்தன. இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி.பழனிச்சாமி, வட்டாட்சியர் பரமசிவம் ஆகியோர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டனர். அதன்பின் இவ்வழக்கில் கடந்த 2014–ம் ஆண்டு கீழமை நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் ஆசிரியர்கள், அதிகாரிகள் என மேலும் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ளவர்களும் இப்போது விடுதலை செய்யப்பட்டுவிட்ட நிலையில், ஆசை ஆசையாய் வளர்த்த குழந்தைகளை தீக்கு பறிகொடுத்து விட்டு தவிக்கும் பெற்றோர்களுக்கு எங்கிருந்து நீதி கிடைக்கும்.

 94 குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் கூடுதல் இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்குகளில் இன்னும் நீதி கிடைக்கவில்லை. அவர்கள் நீதிக்காக தொடர்ந்து போராடுகின்றனர். ஆனால், குற்றமிழைத்தவர்களுக்கு எளிதாக விடுதலை கிடைத்து விடுகிறது.

கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். எனவே, இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story