நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதில்


நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதில்
x
தினத்தந்தி 11 Aug 2017 10:15 PM GMT (Updated: 11 Aug 2017 6:50 PM GMT)

அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால் எதிர்கொள்ள தயார் என்று அமைச்சர் ஜெயகுமார் மு.க.ஸ்டாலினுக்கு பதில் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அ.தி.மு.க. 3 அணியாக பிரிந்துள்ளதால் அசாதாரண சூழல் நிலவுவதாகவும், இதனால் தமிழக மக்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் பதில் அளித்துள்ளார். அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் எப்போதுமே எட்டாத கனிக்கு கொட்டாவி விடுபவர். கறந்த பால் மடி புகாது, கருவாடு எப்போதும் மீன் ஆகாது. அதுபோல மு.க.ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது. நடிகர் கமல்ஹாசனோடு மு.க.ஸ்டாலின் சேர்ந்துகொண்டு, ஒரு கொதிக்கு தாங்காத நொய்யரிசி போல துள்ளிக்குதிப்பது வேடிக்கையானது. அது எடுபடவும் செய்யாது.

ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசு சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதிலும், மக்களுக்கு தேவையான அடிப் படை வசதிகளை செய்து கொடுப்பதிலும் கண்ணும், கருத்துமாக செயல்படுகிறது. கோட்டை முதல் கிராமம் வரை அனைத்து பணிகளும் மிகவேகமாக நடந்துவருவதை மு.க.ஸ்டாலின் மனம் ஏற்க மறுக்கிறது.

எங்கள் அரசு ஸ்திரத்தன்மையோடு தான் செயல்படுகிறது. எங்களுடைய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால் அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நமது நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என்று சொன்னால், அது தி.மு.க. ஆட்சி தான்.

ஜெய லலிதா கட்டிக்காத்த இந்த இயக் கத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோவார் கள். அழிக்க நினைத்தால் அந்த பரிதாப நிலைதான் மு.க. ஸ்டாலினுக்கும் ஏற்படும். தமிழகத்தில் அசாதாரண சூழல் எதுவும் இல்லை. மு.க.ஸ்டாலின் வேண்டும் என்றால் அசாதாரண சூழலில் இருக்கலாம். ஆட்சி தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து வாக்களித்த மக்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, மு.க.ஸ்டாலின் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story