இரட்டை இலை சின்னம் யாருக்கு? வாக்கெடுப்பு நடத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


இரட்டை இலை சின்னம் யாருக்கு? வாக்கெடுப்பு நடத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Aug 2017 10:15 PM GMT (Updated: 11 Aug 2017 6:52 PM GMT)

அ.தி.மு.க. இரு அணிகளில், இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து முடிவு செய்ய அக்கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மத்தியில் வாக்கெடுப்பு நடத்தக்கோரிய வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை, 

தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியபட்டினத்தை சேர்ந்தவர் வக்கீல் ராம்குமார் ஆதித்தன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் சின்னம் (ஒதுக்கீடு) சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சி இரண்டு அணியாக பிரிந்தால், அந்த கட்சியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதில் அதிக வாக்கு பதிவான அணிக்கு, கட்சியின் தேர்தல் சின்னத்தை ஒதுக்க வேண்டும்.

இந்த நடைமுறை, 1968-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்தபோதும், கடந்த ஜனவரி மாதம் சமாஜ்வாதி கட்சி இரண்டாக பிரிந்த போதும் பின்பற்றப்பட்டன. ஆனால், இந்த நடைமுறை, அ.தி.மு.க. தேர்தல் சின்னம் விவகாரத்தில் பின்பற்றப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் பாரபட்சமானது. எனவே வாக்கெடுப்பு நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஆதி கேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘மனுதாரர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தான் வழக்கு தொடர முடியும். சென்னை ஐகோர்ட்டில் தொடர முடியாது’ என்று கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து, வழக்கை திரும்ப பெறுவதாக மனு தாரர் வக்கீல் கார்த்திக் சுப்பிரமணியன் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்பப்பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story