என்ஜினீயரிங் கலந்தாய்வு முடிவடைந்தது 89 ஆயிரம் காலி இடங்கள் உள்ளன
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. 89 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. 17-ந் தேதி துணை கலந்தாய்வு நடக்கிறது.
தமிழகத்தில் 518 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை நடத்தி வருகிறது. கலந்தாய்வை நடத்த கல்லூரிகளில் இருந்து 1 லட்சத்து 75 ஆயிரத்து 500 இடங் கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வந்தன. இந்த இடங்களுக்கு 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 மாணவ- மாணவிகள் தான் விண்ணப்பித்தனர். இந்த கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது.
நேற்று வரை 86 ஆயிரத்து 355 மாணவ- மாணவிகள் இடங் களை தேர்ந்து எடுத்துள்ளனர்.
அரசு ஒதுக் கீட்டு இடங்களில் 89 ஆயிரத்து 149 இடங்கள் காலியாக உள்ளன. ஆனால் கடந்த ஆண்டு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக கிடந்தன. இந்த வருடம் மருத்துவ கலந்தாய்வு நடத்த கால தாமதம் ஏற்பட்டதால் என்ஜினீயரிங் படிப்பில் சேருவோரின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கலந்தாய்வு குறித்து நேற்று என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை இந்துமதி கூறியதாவது:-
துணை கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவை வருகிற 16-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செய்யலாம். விண்ணப்பித்தவர்களில் தகுதியான மாணவ-மாணவிகளுக்கு மறுநாள் (17-ந் தேதி) துணை கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வை, ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
18-ந் தேதி இடங்கள் காலியாக இருக்கும் அருந்ததியினர் இடங்களில் ஆதிதிராவிடர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆதிதிராவிடர்கள் 18-ந் தேதி காலை 9 மணிமுதல் 10 மணிக்குள் அனைத்து சான்றிதழ்களுடன் அண்ணா பல்கலைக்கழகம் வந்து நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கை மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு அன்றே கலந்தாய்வு நடத்தப்படும்.
இன்று (சனிக்கிழமை) கட்டிடக்கலை (பி.ஆர்க்) படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடக்கிறது. 18-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். 19-ந் தேதி காலை 7 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்படும். அன்று பகல் 1 மணிக்கு தகுதியான அனைத்து மாணவ- மாணவிகளும் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.
இவ்வாறு பேராசிரியை இந்துமதி தெரிவித்தார்.
Related Tags :
Next Story