மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எழுத 450 மையங்களில் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எழுத 450 மையங்களில் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 12 Aug 2017 10:00 PM GMT (Updated: 12 Aug 2017 5:32 PM GMT)

50 மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

நீலகிரி

ஐ.ஐ.டி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுத 450 மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டு முதல் பிளஸ்–1 பொதுத்தேர்வு கொண்டுவரப்படுகிறது. பிளஸ்–2 பொதுத்தேர்வில் மாணவர்கள் இடையே எழும் மன அழுத்தத்தை போக்கும் வகையில், தேர்வு எழுதும் நேரம் 3 மணியில் இருந்து 2½ மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது.

பிளஸ்–2 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தோல்வி அடையும் மாணவர்கள் அதே பள்ளியில் தொடர்ந்து படித்து ஜூன் மாதம் நடைபெறும் தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்று மேற்கல்வியை தொடர முடியும். பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதில் தமிழகத்தின் தொன்மையும், பழமையும் மாறாமல் இருக்கும்.

தமிழகத்தில் கழிப்பறை வசதிகள் இல்லாத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனியார் அமைப்புகளுடன் இணைந்து 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அதில் ஒவ்வொரு ஸ்மார்ட் வகுப்புக்கும் ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. இதில் கணினி, ஒளித்திரை போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிக்கப்படும். மாணவர்கள் ஐ.ஐ.டி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் எழுதும் வகையில் 450 மையங்களில் பயிற்சி கொடுக்கப்படும்.

நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யக்கோரி, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை 4 முறை சந்தித்து உள்ளார். இதற்கான சட்டமும் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. நீட் தேர்வை ரத்துசெய்ய தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் ரூ.640 கோடி நிதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாதம் ரூ.7,500 சம்பளம் பெறும் வகையில் தற்காலிக ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story