மாணவர்களுக்கு துரோகம் செய்த தமிழக அரசுக்கு கடும் தண்டனை கிடைக்கும் டாக்டர் ராமதாஸ்
மாணவர்களுக்கு துரோகம் செய்த தமிழக அரசுக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெறுவதில் பினாமி அரசு தோல்வியடைந்து விட்டது. இதனால் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை அரசு இழைத்திருகிறது.
நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அரிய வாய்ப்பு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களில் கிடைத்தது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கான சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே தேர்தலில் மத்திய ஆளுங்கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க முடியும் என்று தமிழக ஆட்சியாளர்கள் அறிவித்திருந்தால், தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியற்ற நிலை உருவாகியிருந்திருக்கும். ஆனால், அதை பயன்படுத்திக்கொள்ள அரசு தவறிவிட்டது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த நலன்களையும், உரிமைகளையும் மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டு, ஊழல் செய்வதற்கான உரிமத்தை மட்டும் பெற்றிருக்கும் கங்காணி அரசின் உண்மைத் தோற்றத்தை மக்கள் நன்றாக உணர்ந்து விட்டனர்.
மாணவர்களுக்கும், உழவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பினாமி அரசு செய்யும் துரோகங்களுக்கு வெகுவிரைவில் கடும் தண்டனை கிடைக்கப் போவது உறுதி.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story