எல்.இ.டி. பல்புடன் கூடிய தெருவிளக்குகள் கொள்முதல்: ஒப்பந்த நிபந்தனைகளை எதிர்த்த வழக்கு தள்ளுபடி


எல்.இ.டி. பல்புடன் கூடிய தெருவிளக்குகள் கொள்முதல்: ஒப்பந்த நிபந்தனைகளை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 12 Aug 2017 10:00 PM GMT (Updated: 2017-08-13T00:35:46+05:30)

எல்.இ.டி. தெருவிளக்கு களை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு விதித்த ஒப்பந்த நிபந்தனைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், தியாகராய நகரை சேர்ந்த சி.கார்த்திகேயன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள 31 மாவட்ட கலெக்டர்களும், 9 லட்சத்து 6 ஆயிரத்து 310 எல்.இ.டி. பல்புடன் கூடிய தெருவிளக்கு ‘செட்டுகளை’ கொள்முதல் செய்ய ஒப்பந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘எல்.இ.டி. பல்புடன் கூடிய தெருவிளக்கு செட்டுகளை சென்னை மாநகராட்சியில் உள்ள எலக்ட்ரிக்கல் பிரிவிடம் ஆய்வு செய்து, தரச்சான்றிதழ் பெற்று வரவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் அளவுக்கு மாநகராட்சி எலக்ட்ரிக்கல் பிரிவில் போதிய உபகரணங்கள் இல்லை. எனவே இந்த நிபந்தனையை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஒப்பந்ததாரர்கள் வழங்கும் பல்புகள் தரமானது தானா? என்பதை உறுதிசெய்ய சென்னை மாநகராட்சி எலக்ட்ரிக்கல் பிரிவில் ஆய்வு செய்யவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சி ஆய்வு கூடம், தரமானது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

எனவே, சுப்ரீம் கோர்ட்டு பல வழக்குகளில் பிறப்பித்த தீர்ப்புகளின்படி, இந்த ஒப்பந்த நிபந்தனைகள் தன்னிச்சையானது என்று கூற முடியாது. குறிப்பிட்ட ஒரு ஒப்பந்ததாரருக்கு சாதகமாக, இந்த நிபந்தனைகளை தமிழக அரசு உள்நோக்கத்துடன் உருவாக்கியுள்ளதாகவும் தெரியவில்லை. இந்த திட்டப்பணி எந்த ஒரு இடையூறும் இல்லாமல் செயல்படவேண்டும் என்பதற்காக தான் இந்த நிபந்தனையை அரசு உருவாக்கியுள்ளது. எனவே, ஒப்பந்த நிபந்தனைகளை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Next Story