அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தேர்தல் ஆணையத்தின் தவறான முடிவே காரணம் சுப்பிரமணிய சாமி


அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தேர்தல் ஆணையத்தின் தவறான முடிவே காரணம் சுப்பிரமணிய சாமி
x
தினத்தந்தி 12 Aug 2017 11:00 PM GMT (Updated: 12 Aug 2017 7:20 PM GMT)

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தேர்தல் ஆணையத்தின் தவறான முடிவே காரணம் என்று சுப்பிரமணிய சாமி கூறினார்.

ஆலந்தூர், 

பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் இருப்பது ஒரு அணி தான், அது சசிகலா தலைமையிலான அணி. மற்றவர்கள் ஓரிரு பேர் தான். கட்சியில் தனி மனிதனை இணைப்பது பற்றி பெரிய விஷயமாக கேட்கிறீர்கள். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் போய் சேரட்டும். டெல்லியில் இணைப்பு பேச்சுவார்த்தை என்பது பத்திரிகைகளில் செய்யப்படும் வம்பு தான்.

அ.தி.மு.க.வுக்கு தலைமை சசிகலா தான். தினகரன் சசிகலா உறவினர். தேர்தல் ஆணையத்தில் வாதாட சரியான வக்கீல் இருந்து இருக்க மாட்டார். இல்லையென்றால் 5 நிமிடத்தில் வாதாடி இரட்டை இலை சின்னத்தை பெற்றுவிடலாம்.

தமிழகத்தில் பாரதீய ஜனதா பின்புறமாக இருந்து ஆட்சி செய்வதாக எனக்கு தெரியவில்லை. சட்டப்படி சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு தான் தனிப்பெரும்பான்மை இருக்கிறது என கவர்னரிடம் தெரிவித்தேன். அது நிரூபிக்கப்பட்டது.

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தேர்தல் ஆணையம் சரியான முடிவு எடுக்காதது தான் காரணம். தேர்தல் ஆணையம் தவறு செய்து உள்ளது. அ.தி.மு.க.வை இரு அணிகளாக்கி இரட்டை இலை சின்னம் இல்லை என தேர்தல் ஆணையம் தந்த இடைக்கால தீர்ப்பு தவறானதாகும். சுப்ரீம் கோர்ட்டின் பல தீர்ப்புகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

தேவைப்பட்டால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவோம் என தி.மு.க.வில் சொல்கிறார்கள். அப்படியென்றால் இப்போது தேவை வரவில்லை என்று அர்த்தம். தைரியம் இருந்தால் கொண்டுவரட்டும்.

தமிழகத்திற்கு தனியாக கவர்னர் நியமிக்க வேண்டிய அவசியம் உள்ளதா? அவர் 2 மாநிலங்களிலும் நன்றாகத்தான் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நான் கவனிக்கவில்லை. இந்தியாவில் 35 ஆட்சிகள் நடக்கிறது. எல்லாவற்றையும் நான் எப்படி கவனிக்க முடியும். தமிழகத்தில் ஒரு மாதம் இருந்து ஆட்சியின் செயல்பாடு எப்படியிருக்கிறது என்று சொல்கிறேன்.

பாரதீய ஜனதா கட்சி ஆட்சி இல்லாத மாநிலங்களில் நாங்கள் ஏன் குழப்பம் செய்ய வேண்டும். அந்த மாநிலங்களில் அந்த கட்சிகளே அதை செய்துகொண்டு இருக்கின்றன.

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அகமது பட்டேலை தோற்கடிக்க முயற்சி செய்தோம். எங்களுடைய எதிரியை தோல்வி அடைய செய்யக்கூடாதா? 57 ஓட்டுகளில் 44 ஓட்டுகள் தான் அவருக்கு கிடைத்தது. பாரதீய ஜனதா கட்சிக்கு விழுந்த 2 ஓட்டுகளை தேர்தல் ஆணையம் ரத்துசெய்ததால் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இல்லையென்றால் தோல்வியடைந்து இருப்பார். காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டியது எங்களுடைய பொறுப்பு.

காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் மீது வழக்குகள் உள்ளன. அவர்கள் சிறைக்கு செல்ல உள்ளனர். சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஜாமீனில் வெளியே உள்ளனர். ப.சிதம்பரம் மகன் நாட்டை விட்டு ஓடிப்போக முயற்சிக்கிறார். கொலை வழக்கில் சசிதரூரும் சிறைக்கு செல்ல இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சிறைக்குள் தான் நடக்கும் என நினைக்கிறேன்.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் வழக்கு போடப்பட்டுள்ளது என்றால் கார்த்தி சிதம்பரம் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியது தானே.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story