டெல்லியில் நரேந்திர மோடியை இன்று ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கிறார்
பிரதமர் நரேந்திர மோடியை ஓ.பன்னீர்செல்வம் இன்று (திங்கட்கிழமை) சந்தித்து பேசுகிறார்.
சென்னை,
பிரதமரை சந்திக்க முடியாத நிலையில் ஷீரடி சென்ற ஓ.பன்னீர்செல்வம் அங்கு சாய்பாபா கோவிலில் நேற்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். அவரிடம் இணைப்பு குறித்து கேட்டபோது, சாய்பாபா வடக்கே போக சொன்னால் வடக்கே (டெல்லி) போவேன், தெற்கே (சென்னை) போக சொன்னால் தெற்கே போவேன் என்று பதில் அளித்தார். இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் அலுவலகம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு தகவல் அனுப்பியுள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி–ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பின்போது அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றி பேசுவார்கள் என்றும், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிகிறது. மோடியை சந்தித்த பிறகு அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முயற்சி இறுதி கட்டத்தை அடையும் என்ற எதிர்பார்ப்பும் அ.திமு.க. தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, அ.தி.மு.க. அணியில் இருந்து ஒதுக்கப்பட்டதால் தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் வகையில் மதுரை மேலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்திற்கு இன்று (திங்கட்கிழமை) டி.டி.வி.தினகரன் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த கூட்டத்தில் அவருக்கு ஆதரவு அளிக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தின் மூலம் அ.தி.மு.க. 3–வது அணிக்கு டி.டி.வி.தினகரன் வித்திட உள்ளார்.