சென்னையை குளிர்வித்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி


சென்னையை குளிர்வித்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 14 Aug 2017 2:43 AM IST (Updated: 14 Aug 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பெய்த மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முற்றிலும் பொய்த்துப்போனதால் வறட்சியும், கடுமையான குடிநீர் பஞ்சமும் நிலவி வருகிறது. தென்மேற்கு பருவமழையாவது ஓரளவுக்கு கை கொடுக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தென்மேற்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை.

தலைநகர் சென்னையை பொறுத்தமட்டில், இந்த மாதத்தின் தொடக்கத்தில் கோடை காலத்துக்கு நிகராக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்தநிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, சென்னையில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் மழைக்கு ஏற்றாற்போல கருமேகங்கள் சூழ்ந்து ரம்மியமான சூழலுடன் காணப்பட்டது. எழும்பூர், வேப்பேரி, நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, தேனாம்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

இதனால் பிரதான சாலைகளில் மழை நீர் வடிய இடமின்றி பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல தாழ்வான பகுதிகளில் வழக்கம்போல் மழை நீர் தேங்கியது. சில இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி கிடந்ததால், வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

மழையை எதிர்பார்க்காமல் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். சிலர் நனையாமல் இருப்பதற்காக மேம்பாலங்கள், கடைகளின் ஓரங்களில் ஒதுங்கி நின்றதையும் காணமுடிந்தது.

கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், சென்னையில் மழை பெய்திருப்பது பொதுமக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழை காரணமாக சென்னையில் நேற்று வெப்பம் தணிந்து, குளு, குளு சூழல் காணப்பட்டது.


Next Story