சசிகலா காலில் விழுந்து பெற்ற பதவியை திண்டுக்கல் சீனிவாசன் ராஜினாமா செய்வாரா? டிடிவி தினகரன்
பொருளாளர் பதவியை திண்டுக்கல் சீனிவாசன் ராஜினாமா செய்வாரா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா-தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அணிகள் இணைவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை ஏற்றுக் கொள்ளாமல் தனி அணியாக செயல்பட்டு வரும் தினகரன், எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை கடுமையாக சாடி வருகிறார். சென்னை எழும்பூர் கோர்ட்டில் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ஆஜரான டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நான் ஏற்கனவே கூறியபடி, தலைமை கழகத்தில் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு எனக்கு எதிராகவும், பொதுச் செயலாளருக்கு எதிராகவும் தீர்மானம் போட்டிருப்பதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தொண்டர்களை திசை திருப்பி கொல்லைப் புறம் வழியாக கட்சியை கைப்பற்ற சில அமைச்சர்கள் செயல்படுகிறார்கள். இதுபோன்ற செயல்களை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தவறுகளை திரும்ப திரும்ப செய்யக் கூடாது. சரியான வழியில் வேலை செய்ய வேண்டும். அமைச்சர்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவார்கள் என்றார்.
மேலும் பேசுகையில், அம்மா காட்டிய வழியில் கட்சியை வழி நடத்திச் செல்ல வேண்டும். இதைத்தான் தொண்டர்களும் விரும்புகிறார்கள். அப்படி செயல்படாமல் வேறு வழியில் கட்சியை கொண்டு செல்ல நினைத்தால் அது அமைச்சர்களுக்கு ஆபத்தாகவே முடியும் என்றார்.
செய்தியாளர்கள் திண்டுக்கல் சீனிவாசன் உங்களை திருடன் என்று கூறியுள்ளாரே? என கேள்வி எழுப்பிய போது டிடிவி தினகரன் பதிலளிக்கையில், யார் திருடன் என்பது அனைவருக்குமே தெரியும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. தற்போது அவர் வனத்துறை அமைச்சராக உள்ளார். அவர் எங்கிருந்தார்? எப்படி இருந்தார் என்பது கட்சியினருக்கு தெரியும். திண்டுக்கல் சீனிவாசனுக்கு வயதாகி விட்டது. அதனால் அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்ள நினைக்கிறார்.
மீண்டும் தேர்தல் வந்தால் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா? என்கிற பயமும் அவருக்கு உள்ளது. சசிகலாவின் காலில் விழுந்துதான் பொருளாளர் பதவியை அவர் பெற்றுள்ளார். அந்த பதவியை அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். காலில் விழுந்த படத்தை வெளியிட்டால் வயதில் பெரியவரான அவருக்கு தான் அசிங்கம். இனி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சீனிவாசன் பேச வேண்டும் என்றார்.
அமைச்சர் ஜெயக்குமார் உங்களை எட்டப்பன் என்று கூறி இருக்கிறாரே? என கேள்விக்கு பதிலளித்த தினகரன், ஜெயக்குமார் அரசியலில் எப்படி இருந்தார் என்பது உங்களுக்கு தெரியும். சசிகலாவிடம் மன்றாடி நிதி அமைச்சர் பதவியை பெற்றவர் அவர். ஆர்.கே.நகர் தேர்தலில் எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர்தான் இந்த ஜெயக்குமார். அதனை யாரும் மறந்து விடவில்லை. ஜெயக்குமார் கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னை பார்த்தால் எட்டப்பன் யார் என்பது தெரியும்.
எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று கமல் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் இதற்கு எடப்பாடி பழனிசாமிதான் உரிய பதில் அளிக்க வேண்டும் என்றார்.
ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, நீங்கள் எந்த பொறுப்பிலும் இல்லை என்று கூறியுள்ளாரே? என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில், அவர்கள் 10 பேரை வைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அணியில் நான் பதவியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லையே? என்றார்.
=
Related Tags :
Next Story