தமிழக அரசின் ஓராண்டு நீட் அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்


தமிழக அரசின் ஓராண்டு நீட் அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்
x
தினத்தந்தி 16 Aug 2017 8:54 PM IST (Updated: 16 Aug 2017 8:54 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் ஓராண்டு நீட் அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் இதுவரை பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில்தான் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில், ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வின் மூலம் மாணவர்களை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்தது. ‘நீட்’ தேர்வின் மூலம் தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கை நடத்தினால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன.

இருந்த போதிலும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாயின. ‘நீட்’ தேர்வு முடிவுகளின் அடிப்படையில்தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.

என்றாலும் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்தது.

‘நீட்’ தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் அவசர சட்ட மசோதா மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.  நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்களிக்கலாம் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் ஓராண்டு நீட் அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.  தமிழக அரசின் சட்ட வரைவுக்கு சுகாதார துறை, உள்துறை அமைச்சகம் ஒப்புதல் தந்தவுடன் அது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

Next Story