மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்


மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
x
தினத்தந்தி 17 Aug 2017 5:15 AM IST (Updated: 17 Aug 2017 1:02 AM IST)
t-max-icont-min-icon

‘மரமும், புயலும் நட்பாகி விட்டதால் இனி தென்றல் தான் வீசும்’ என்று அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குட்டிக்கதை மூலம் சூசகமாக கூறினார்.

கடலூர்,

கடலூரில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். இதை ஒரு கதையின் மூலம் கூறினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.

ஒரு காட்டில் இருக்கும் ஒரு பெரிய ஆலமரம், தனது நிழலில் ஒதுங்கும் பறவை, விலங்கு, மனிதர்களிடம் எப்போதும் தனது பெருமையை கூறிக்கொண்டு இருக்கும். ஒரு நாள் முனிவர் ஒருவர் அந்த மரத்தடியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது வழக்கம் போல் அந்த முனிவரிடம் மரம் தனது பெருமைகளை கூறியது. எனது நிழலில் தான் சிங்கம், புலி, கரடி, யானை எல்லாம் படுத்து ஓய்வு எடுக்கின்றன. இந்த காட்டில் வாழும் அத்தனை உயிரினங்களும் என் ஒருவனுக்கு தான் கட்டுப்பட்டவை. எனவே நான் இந்த காட்டுக்கு பெரியவன் என்று முனிவரிடம் மரம் கூறியது.

முனிவர் சிரித்தபடியே மரமே, நீ எல்லோரிடமும் உனது பெருமையை பேசிக்கொண்டு இருந்தால், உனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விடுவார்கள். காற்று உன் நண்பனாக இருக்கும் வரையில் உனக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்றார்.

இதை கேட்ட மரம், முனிவரே காற்று எனது நண்பன் தான். ஆனால் அவன் என்னை விட உயர்ந்தவன் அல்ல. காற்றை எதிர்க்கும் வல்லமை எனக்கு உண்டு என்றது.

மரமே நீ கூறுவதை அப்படியே காற்றிடம் போய் சொல்லட்டுமா என்றார் முனிவர்.

எனக்கு பயம் இல்லை. என்னோடு மோதி பார்க்கட்டும். யார் வல்லவர் என்று காட்டுகிறேன் என்று மரம் சவால் விட்டது. சரி இரவே காற்றை அனுப்புகிறேன். உன்னை புயலாக வந்து சந்திப்பான் என்று முனிவர் கூறிவிட்டு சென்றார்.

அதன் பின்னர் மரத்திற்கு பயம் வந்தது. இரவில் காற்று, புயலாக வந்து தன்னை தாக்கும்போது எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பதற்காக தன்னிடம் இருந்த கிளைகள், காய்கள், கனிகள் அனைத்தையும் உதிர்த்து விட்டு, நெட்ட நெடு மரமாக நின்றது.

இரவில் காற்று வந்தது, ஏய் நண்பனே நான் புயலாக வந்தால் எதையெல்லாம் இழப்பாயோ அதையெல்லாம் நான் வரும் முன்பாகவே நீ இழந்து விட்டாய். உன்னுடைய ஆணவத்தால், உன்னில் உருவான கிளை, காய், கனி என்று அனைத்தையும் நீயே இழந்து விட்டாய். உன் நிழலுக்காக வருபவர்கள் யாரும் இனி வரமாட்டார்கள். உனது ஆணவத்தை கைவிட்டு எனக்கு நல்ல நண்பனாக மாறு. நமக்குள் பகை ஏற்பட்டால், உனக்கு மட்டுமல்ல இந்த காட்டுக்கே கேடு விளையும் என்று மரத்துக்கு காற்று அறிவுரை கூறியது.

மரம் தனது தவறை உணர்ந்தது. மரமும், காற்றும் பழையபடி நண்பர்கள் ஆனார்கள். ஆக இனி அந்த காட்டில் தென்றல் தான் வீசப்போகிறது. இதை கழக உடன்பிறப்புகள் மனதில் நிறுத்தி, ஒற்றுமையுடன் செயல்பட்டு, எம்.ஜி.ஆரின் விருப்பத்தையும், ஜெயலலிதாவின் எண்ணங்களையும் நிறைவேற்றிட உறுதியேற்போம் என்று கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

Next Story