மெஜாரிட்டியை நிரூபிக்க பணம் கொடுப்போம் என்ற ரீதியில் பேட்டி: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை கண்டிக்காமல் இருப்பது ஏன்?
மெஜாரிட்டியை நிரூபிக்க பணம் கொடுப்போம் என்ற ரீதியில் பேட்டி அளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டிக்காமல் இருப்பது ஏன்? என்று தி.மு.க. கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
அ.தி.மு.க.வில் உதயமாகியுள்ள முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்றது செல்லாது என்று போட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.
இந்த நேரத்தில், ஒரு அமைச்சரே ஆட்சிக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க பணம் கொடுப்போம் என்ற ரீதியில் பேட்டியளித்திருப்பது சட்டமன்ற ஜனநாயகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியை தக்க வைக்க எப்படிப்பட்ட அவமானகரமான செயலையும் செய்வதற்கு இன்னொரு முறை இந்த குதிரை பேர அரசு தயாராகி கொண்டிருக்கிறது என்பதை எடுத்து காட்டுகிறது.பணம் கொடுத்து வெற்றி பெறுவோம் என்று அதிகார வெறி பிடித்த அமைச்சர் ஒருவரே பேட்டியளித்தும் இதுவரை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து வாய் திறக்காமல் இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. இதுவரை அந்த அமைச்சரை கண்டிக்காமல் இருப்பது ஏன்?. முதல்–அமைச்சர் மட்டத்தில் இப்படி குதிரை பேரம் நடத்துவது பற்றி அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்.
இந்த கேள்விகளுக்கு எல்லாம் இப்போது பதில் சொல்லவில்லையென்றாலும், இந்த அரசை மெஜாரிட்டியை நிரூபிக்க கட்டளையிடும் சூழ்நிலை வரும் போது கவர்னர், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் ‘பாதாளம் வரை பாயும்’ பேட்டியை நிச்சயம் கவனத்தில் எடுத்து கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.Related Tags :
Next Story