தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பின் விரைவில் கூடுகிறது அ.தி.மு.க பொதுக்குழு


தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பின் விரைவில்  கூடுகிறது அ.தி.மு.க பொதுக்குழு
x
தினத்தந்தி 17 Aug 2017 10:57 AM GMT (Updated: 17 Aug 2017 10:57 AM GMT)

சசிகலாவின் பொது செயலாளர் பதவி விவகாரத்தில் தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பின் விரைவில் கூடுகிறது அ.தி.மு.க பொதுக்குழு

சென்னை,

எடப்பாடி அணியால் நீக்கி   வைக்கப்பட்ட தினகரன் கட்சியை தன் வசப்படுத்த தீவிர முயற்சி யில் ஈடுபட்டு வருகிறார். மதுரையை அடுத்த மேலூரில் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி தனது பலத்தை காட்டினார். 22 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.பி.க்கள் என்னிடம் இருக்கிறார்கள் என்று மார்தட்டினார்.

அடுத்து சென்னையில் 23-ந்தேதி பொதுக்கூட்டம் நடத்தி ஆதரவாளர்களை திரட்டுகிறார். அடுத்த மாதம் 5-ந்தேதி வரை முக்கிய ஊர்களில் பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருக்கிறார்.

அதன் பிறகும் எடப் பாடி அணி இறங்கி வராவிட்டால்  அதிரடியாக முடிவு எடுப்பார்  என்று அவரது  ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். தன்னை ஆதரிக்கும் 22 எம்.எல்.ஏ.க்களை கவர்னர் மாளிகைக்கு அழைத்து சென்று தனது பலத்தை காட்டுவார் என்றும் இதனால் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

3 அணிகளிலும் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி அரசு கவிழ்வதை விரும்பவில்லை. அதிகாரப் போட்டிக்காக மட்டுமே மோதுகிறார்கள். ஆட்சி கவிழ்ந்தால் எல்லோருக்கும் ஆபத்து என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி இருக்காது.

தினகரன் அணியில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி அணியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதே போல தினகரன் தரப்பினரும் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதி யாக உள்ளனர்.

அதே நேரத்தில் எடப்பாடி அணிக்கு செல்வதா? தினகரன் பக்கம் சாய்வதா? என்கிற குழப்பமான மன நிலையில் எம்.எல்.ஏ.க்கள் பலர் உள்ளனர். அவர்களின் மனதை மாற்றி தங்கள் பக்கம் இழுக்க இரு அணிகளுமே கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இதன் மூலம் அ.தி.மு.க. வில் அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் வெற்றி பெறவே எடப்பாடி பழனிசாமியும், தினகரனும் மோதிக் 
கொண்டுள்ளனர். இதில் சாதிக்கப் போவது யார்? சாய்வது யார்? என்பது தெரியவில்லை. கட்சிக்குள் நிலவும் இந்த சண்டையால் அ.தி.மு.க. தொண்டர்களும் கடந்த 7 மாதங்களாக குழப்பத்தில் தவித்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ரகசிய  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு முன்பு, தேர்தல் ஆணையத்திடம் விசாரணையில் உள்ள சசிகலாவின் பொதுச் செயலாளர் விவகாரத்தில் வரும் தீர்ப்புக்காக இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் காத்திருக்கின்றனர்.

சசிகலா நியமனம் செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தால், ஜெயலலிதாவால் அவைத் தலைவராக நியமிக்கப்பட்ட மதுசூதனன், உடனடியாகப் பொதுக்குழு கூட்டத்தை நடத்த அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்று தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. மேலும், கட்சியை வழி நடத்தக் குழு அமைக்கப்படவுள்ளது. இந்தக் குழுவில் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் இடம் பெறுவர். கட்சியை வழிநடத்தும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களில் சிலருக்கு ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ளதாக அ.தி.மு.க  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story