போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை: தீபக்
போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தீபக் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதேபோல், ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லமும் அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றம் செய்வதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எங்களின் பூர்விக சொத்தான போயஸ் கார்டன் இல்லத்தை விட்டு கொடுக்க முடியாது என்று தீபா போர்க்கொடி தூக்கினார்.
இந்த நிலையில், தீபாவின் சகோதரர் தீபக் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க எங்களுக்கு ஆட்சேபணையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு தொலைபேசி வாயிலாக தீபக் அளித்த பேட்டியில், இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதேபோல், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தீபக் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில் “ வேதா நிலையத்தை நினைவிடமாக்கும் முன் சட்டப்படி எங்களது கருத்தை கேட்க வேண்டும். போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதா யாருக்கும் எழுதி வைக்கவில்லை.போயஸ் கார்டன் இல்ல வாரிசுகளான தங்களின் கருத்தை கேட்காமல் செய்வது சட்டப்படி தவறு. ஜெயலலிதா தாயார் சந்தியா உயில் படி வேதா நிலையம் எனக்கும் சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது.எங்களின் கருத்துக்களை கேட்டறிந்து நினைவிடமாக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தீபக் எழுதியுள்ள கடிதத்தில் தேதி மாறியுள்ளது. கடிதத்தில் 9 ஆம் தேதி குறிப்பிட்டு பேனாவால் அடிக்கப்பட்டு 16 ஆம் தேதி என மாற்றப்பட்டுள்ளது. நேற்றுதான் (17ஆம் தேதி) முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அறிவிப்பு வெளியாக கூடும் என கருதி தீபக் முன்கூட்டியே கடிதம் எழுதியிருக்க கூடும் என தெரிகிறது.
Related Tags :
Next Story