கைது செய்யப்பட்ட வாலிபரின் கால் உடைப்பு: திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


கைது செய்யப்பட்ட வாலிபரின் கால் உடைப்பு: திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Aug 2017 2:45 AM IST (Updated: 19 Aug 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

கைது செய்யப்பட்ட வாலிபரின் கால் உடைத்தது தொடர்பாக திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

வாலிபரின் காலை அடித்து உடைத்தது தொடர்பாக திருவாலங்காடு போலீசாரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்துள்ள மீஞ்சூரை சேர்ந்தவர் மலர் (வயது 46). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘என்னுடைய இளைய மகன் எட்வினை (23), கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி மீஞ்சூர் போலீ சார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். பின்னர், அவனை திருவாலங்காடு போலீசில் ஒப்படைத்த னர். திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக் டர், சப்- இன்ஸ்பெக் டர் ஆகியோர் என் மகனின் காலை அடித்து உடைத்துள்ளனர். பின்னர் கொலை மிரட்டல் வழக்கில், என் மகனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறையில் இருக்கும் என் மகனுக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை. எனவே, முறையான சிகிச்சை வழங்க புழல் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.ரமேஷ் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் டி.ஆர்.உதயகுமார் ஆஜராகி வாதிட்டார். இதன்பின்னர் நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மருத்துவ சிகிச்சை ஆவணங்களை பார்க்கும்போது, மனுதாரரின் மகனின் வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

எனவே, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில், மனுதாரரின் மகனுக்கு சிகிச்சை வழங்கவேண்டும். மனுதாரரின் மகனின் உடல் நிலையை ராஜீவ்காந்தி அரசு ஆஸ் பத்திரி டாக்டர்கள் பரிசோதித்து, அது தொடர்பான அறிக்கையை இந்த ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

மனுதாரரின் மகனின் கால் முறிவு தொடர்பாக, திருவாலங்காடு போலீசாரிடம், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். இந்த மனு மீதான விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story