நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி தற்கொலை


நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 2 Sept 2017 5:45 AM IST (Updated: 2 Sept 2017 6:13 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய மாணவி, தனது மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.


அரியலூர்

தமிழ்நாட்டில் இதுவரை எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெற்று வந்தது.

நீட் தேர்வு

ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு (தேசிய தகுதி நுழைவுத்தேர்வு) நடத்தப்பட்டது. தமிழக அரசு, அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த தேர்வு நடத்தப்பட்டது.

இதனால் பிளஸ்-2 தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண் பெற்று இருந்தபோதிலும், நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெறாததால் ஏராளமான மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது.

மாணவி அனிதா

அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனி தெருவைச் சேர்ந்த மாணவி அனிதா (வயது 17). தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர் பிளஸ்-2 தேர்வில் 1,200-க்கு 1,176 மதிப்பெண் கள் பெற்றார். மருத்துவ படிப்புக் கான இவரது கட் ஆப் மதிப்பெண் 196.75 ஆகும். நீட் தேர்வை எழுதிய இவருக்கு அதில் 700-க்கு 86 மதிப்பெண்களே கிடைத்தது.

அனிதாவின் தந்தை திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக உள்ளார். மணிரத்னம், சதீஷ் குமார், பாண்டியன், அருண்குமார் என்ற 4 சகோதரர்கள் உள்ளனர். தாயார் ஆனந்தி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

நீட் தேர்வை ரத்து செய்து விட்டு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று கோரி அனிதாவும், மேலும் சில மாணவ- மாணவிகளும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை.
மாநில பாட திட்டத்தில் படித்த கிராமப்புற மாணவியான அனிதா நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெற்றதால், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

மருத்துவ படிப்பு கனவு தகர்ந்தது

இதனால் அவரது மருத்துவ படிப்பு கனவு தகர்ந்தது. பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவம் படித்து டாக்டர் ஆக முடியவில்லையே என்ற கவலை அனிதாவை வாட்டியது.
டாக்டர் ஆகும் தனது லட்சியம் நீட் தேர்வால் தடைபட்டுவிட்டதாக உறவினர்களிடமும், சக தோழிகளிடமும் கூறி அனிதா வேதனைப்பட்டார். கடந்த சில நாட்களாக மிகுந்த மனஉளைச்சலுடன் காணப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை அறிந்ததும் அக்கம்பக்கத்தினர், வேலைக்கு சென்று இருந்த அவரது தந்தை சண்முகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் பதறி அடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். பிணமாக கிடந்த தனது மகளின் உடலை பார்த்து கதறி துடித்தார். அங்கு கூடி இருந்த உறவினர்களும் அனிதாவுக்கு ஏற்பட்ட முடிவை தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுதனர்.

துயரம் தாங்காமல் கதறி துடித்த அனிதாவின் தந்தைக்கும், சகோதரர்களுக்கும் உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றினார்கள்.

கலெக்டர் ஆறுதல்

மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்ததும் அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா மற்றும் போலீஸ் அதிகாரிகள் குழுமூருக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

பின்னர் போலீசார், அனிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்ற போது, உடலை எடுக்கவிடாமல் தடுத்து உறவினர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி, உடலை பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

சாலை மறியல்

இதற்கிடையே நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கிராம மக்களும் குழுமூர்-செந்துறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story