இலவச செட்டாப் பாக்ஸ் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்
அரசு கேபிள் டி.வி. சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ் வழங்கும் திட்டத்தையும், டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
சென்னை
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இலவச செட்டாப் பாக்ஸ்
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், அரசு கேபிள் டி.வி. இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு செட்டாப் பாக்ஸ் விலையின்றி வழங்கப்படும் என்றும் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் குறைந்த கட்டணத்தில் தரமான சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும், டிஜிட்டல் ஒளிபரப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார். அவர் அறிவித்தபடி, தற்போது டிஜிட்டல் உரிமம் பெறப்பட்டுவிட்டது.
தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அனைத்து அரசு கேபிள் டி.வி. வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அடையாளமாக, 32 மாவட்டங்களிலும் இருந்து தலா ஒரு குடும்பத்தினருக்கும், கேபிள் டி.வி. ஆபரேட்டருக்கும் விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி திட்டத்தை தொடங்கிவைத்தார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தரம் உயர்த்தப்பட்ட டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறையும் அவர் திறந்துவைத்தார். டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையையும் அவர் தொடங்கிவைத்தார்.
மணிமகுடம்
அந்த வகையில் தேர்தல் அறிக்கை முழுமையாக செயலாக்கம் பெற்றுள்ளது. இன்னும் 3 மாத காலத்திற்குள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் அனைத்து சந்தாதாரர்களுக்கும் செட்டாப் பாக்ஸ்கள் விலையின்றி வழங்கப்பட்டு, டிஜிட்டல் கேபிள் டி.வி. சேவை வழங்கப்படும். இத்திட்டம் இந்த அரசுக்கு மேலும் ஒரு மணிமகுடமாய் அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தகவல் தொழில்நுட்பவியல் துறையின் முதன்மைச் செயலாளர் தா.கி.ராமச்சந்திரன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெ.குமர குருபரன், பொது மேலாளர் பெ.ரமண சரஸ்வதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டிசம்பருக்குள்
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் பொதுமேலாளர் ரமண சரஸ்வதி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அரசு கேபிள் டி.வி. வாடிக்கையாளர்கள் 70 லட்சம் பேரில் 65 லட்சம் பேர் செட்டாப் பாக்ஸ்க்கு பதிவு செய்துள்ளனர். ஒரு வாரத்துக்குள் மாவட்டத்துக்கு ஆயிரம் செட்டாப் பாக்ஸ்களை வழங்க திட்டமிட்டுள்ளோம். டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் செட்டாப் பாக்ஸ் கிடைத்துவிடும்.
இந்த எஸ்.டி. செட்டாப் பாக்ஸ்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. 3 ஆண்டுகள் வாரண்டி உள்ளது. அடுத்ததாக எச்.டி. செட்டாப் பாக்ஸ்களும் ஒரு மாதத்துக்குள் கிடைத்துவிடும். அவற்றுக்கு கட்டணம் உண்டு. எவ்வளவு என்று இன்னும் முடிவு செய்யவில்லை. எச்.டி செட்டாப் பாக்ஸ்களை வாங்கிய பிறகு எஸ்.டி. செட்டாப் பாக்ஸ்களை மாற்றிக்கொள்ளலாம்.
புகார் தெரிவிக்க...
அடுத்ததாக, ‘டிரிபிள் பிளே பாக்ஸ்’ என்ற புதிய பாக்ஸ்களை கொள்முதல் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் டி.வி., தொலைபேசி, இண்டர்நெட் ஆகிய 3 வசதிகள் கிடைக்கும்.
அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு கேபிள் மூலமாகத்தான் நடக்கிறது. இதற்காக பி.எஸ்.என்.எல். பைபர் நெட்ஒர்க்கை பயன்படுத்துவதால் தடையில்லாமல் ஒளிபரப்பு நடைபெறும். உள்ளூர் சேனல்களையும் அரசு கேபிள் நெட்வொர்க்கில் சேர்ப்பதற்கான ஆலோசனை நடந்துவருகிறது. ஒரு மாதத்தில் அதுபற்றி தெரியவரும். ஆபரேட்டர்கள் நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலித்தால் அதுகுறித்த புகாரை தெரிவிக்க தனி அமைப்பு உருவாக்கப்படும்.
Related Tags :
Next Story