இன்னும் ஒரு வார காலத்திற்குள் சி.பா.ஆதித்தனார் சிலையை பழைய இடத்திலேயே நிறுவ வேண்டும் வைகோ


இன்னும் ஒரு வார காலத்திற்குள் சி.பா.ஆதித்தனார் சிலையை பழைய இடத்திலேயே நிறுவ வேண்டும் வைகோ
x
தினத்தந்தி 9 Sep 2017 9:45 PM GMT (Updated: 9 Sep 2017 7:28 PM GMT)

சி.பா.ஆதித்தனார் சிலையை இன்னும் ஒரு வார காலத்திற்குள் பழைய இடத்திலேயே நிறுவிட வேண்டும் என்று வைகோ கூறினார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நேற்று சென்னை எழும்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திர தமிழ் ஈழத்துக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார். பழமையான கிராமிய கலைகள், தமிழர் நாகரிகத்தை காப்பாற்ற வேண்டும் என்று தான் சடுகுடு (கபடி) விளையாட்டுக்கு ஊக்கம் அளித்தார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் சிலை எங்கள் அலுவலகமான தாயகத்துக்கு அருகில் ருக்மணி லட்சுமிபதி சாலை சந்திப்பில் வைக்கப்பட்டு இருந்தது. நாள்தோறும் அச்சிலைக்கு ‘தினத்தந்தி’ நிர்வாகத்தின் சார்பில் மலர்மாலை சூட்டப்பட்டு வந்தது.

இந்தநிலையில் போக்குவரத்துக்கு ஒழுங்கு செய்வதற்காக ஒரு சில நாட்களுக்குள் அந்த சிலையை எடுத்துவிட்டு, மறுபடியும் அதே இடத்தில் சிலையை வைத்துவிடுவோம் என்று தமிழக அரசு தரப்பிலும், பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் விளைவாக ‘தினத்தந்தி’ நிர்வாகம், பாலசுப்பிரமணியன் ஆதித்தன், கண்ணன் ஆதித்தன் ஆகியோர் இதற்கு ஒப்புக்கொண்டனர். ஆனால் நாட்கள் பல ஆகியும் எந்த வேலையும் நடக்கவில்லை.

வருகிற 27-ந்தேதி தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என்ன ‘சர்க்கார்’ (அரசாங்கம்) நடத்துகிறீர்கள்?. 10 நாட்களில் சிலையை திரும்ப அதே இடத்தில் வைப்போம் என்று சொல்லிவிட்டு, தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான தலைவருடைய சிலையை 4 நாட்களில் வைக்க முடியாதா? என்ன நிர்வாகம் நடத்துகிறீர்கள்? இதெல்லாம் மிக தவறு.

இன்னும் ஒரு வாரத்துக்குள், அதாவது அண்ணா பிறந்த நாளுக்கு முன்பாக, சி.பா.ஆதித்தனாரின் சிலையை மீண்டும் பழைய இடத்திலேயே நிறுவிட வேண்டும் என ம.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகின்றேன். எனது திருமணத்தை முன்னின்று நடத்தியவர் சி.பா.ஆதித்தனார். தமிழர்களுக்காகவே குரல் கொடுத்தவர். எனவே, அவரது சிலையை அதே இடத்திலேயே வைக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதை நான் வலியுறுத்தி கூற விரும்புகிறேன்.

வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி, கடந்த 24 ஆண்டுகளாக அண்ணா பிறந்த நாள் மாநாட்டை ம.தி.மு.க. தமிழகத்தில் பெரும் சிறப்புடன் நடத்தி வருகிறது. கட்சி விழாவையும், அண்ணா பிறந்த நாள் விழாவையும் மட்டுமே ஆண்டுதோறும் நாங்கள் சிறப்பாக நடத்துகிறோம். வேறு எந்த விழாவையும் நாங்கள் நடத்துவது இல்லை. இந்த தடவை மாநில மாநாடாக தஞ்சையில் நடத்துகிறோம்.

தமிழக அரசியல் வரலாற்றில் பல்வேறு அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டு, தமிழக வாழ்வாதாரங்களை அழித்து திராவிட இயக்கத்தின் அடித்தளத்தையே தகர்த்து விடலாம் என்ற அளவுக்கு மதவெறி கூட்டங்களும், இந்துத்துவா சக்திகளும் பா.ஜ.க.வின் அதிகார துணையோடு ஈடுபட்டு கொண்டு இருக்கின்றன.

இந்த நேரத்தில் தமிழக வாழ்வாதாரங்களையும், உரிமைகளையும் காக்க வேண்டும். தியாகம், கண்ணீர், வியர்வையால் கட்டி எழுப்பப்பட்ட திராவிட இயக்கத்தை பாதுகாக்க வேண்டும். அதைவிட எந்த திசை வழியே ம.தி.மு.க. செல்லவேண்டும்? என்பதை தீர்மானிப்பதாக இந்த மாநாடு இருக்கும்.

பிற்பகல் 1 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு நான் பேச தொடங்குகிறேன். இரவு 7.30 மணிக்குள் மாநாட்டு உரையை நிறைவு செய்யவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம்.

தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் மாநாட்டுக்கு வர உள்ளனர். ம.தி.மு.க.வை சாராத தமிழ் உணர்வாளர்களை, மாணவர்களை, தமிழக எதிர்காலத்தை பற்றி கவலைப்படுபவர்களை என அனைவரையும் 15-ந்தேதி தஞ்சையில் நடக்கும் அண்ணா பிறந்தநாள் மாநாட்டுக்கு வாருங்கள் என்று அழைக்கிறேன்.

நாங்கள் என்ன தீர்மானம் நிறைவேற்ற போகிறோம்? தமிழகத்தில் எப்படி எங்கள் அரசியலை முன்னெடுக்க போகிறோம்? என்பதை பிரகடனம் செய்யப்போகிற மாநாடாக அது இருக்கும் என்பதால், நான் அனைத்து தமிழக மக்களையும் கரம்கூப்பி ஒரு ஊழியன் என்ற முறையில், தமிழக நலனுக்காக பாடுபடும் ஒரு வேலைக்காரன் என்ற முறையில் நான் அழைக்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறினார்.

இதேபோல், புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் வைக்கப்பட்டிருந்த சி.பா.ஆதித்தனாரின் சிலை, அங்கே நிலவிவரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அங்கிருந்து தற்காலிகமாக அகற்றப்பட்டு, மீண்டும் புதிய பூங்கா அமைக்கப்பட்டு அந்த சிலை வைக்கப்படும் என்று கூறப்பட்டது. வருகின்ற 27-ந் தேதி அவருடைய பிறந்த நாள் ஆகும். அன்றைய தினம் அனைத்து கட்சித் தலைவர்களும், சமுதாய சங்க பிரதிநிதிகளும் ஆண்டுதோறும் அவருடைய சிலைக்கு மலரஞ்சலி செலுத்துவது வழக்கமாகும்.

தமிழக அரசு மீண்டும் அதே இடத்தில் சி.பா.ஆதித்தனாரின் உருவச் சிலையை நிறுவ வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன் ஆகியோரும் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலையை உடனே அதே இடத்தில் நிறுவிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

Next Story