மக்கள் மனதை கலைத்து ஆட்சியை கவிழ்க்க முயற்சி ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


மக்கள் மனதை கலைத்து ஆட்சியை கவிழ்க்க முயற்சி ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 9 Sep 2017 9:45 PM GMT (Updated: 9 Sep 2017 7:33 PM GMT)

‘பொய் குற்றச்சாட்டு கூறி மக்கள் மனதை கலைத்து ஆட்சியை கவிழ்க்க சிலர் முயற்சி செய்கிறார்கள்’ என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

வேலூர்,

வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடந்தது. விழாவில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

இதயதெய்வம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பின்னால் நம்மை வழி நடத்தியவர் புரட்சி தலைவி ஜெயலலிதா. அம்மாவை வீழ்த்த வஞ்சகமும், துரோகமும் வலையாக விரிக்கப்பட்டது. அதை வென்று தமிழக மக்களை காப்பாற்றினார். அவர் இருக்கும் வரை அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியவில்லை.

பொய் குற்றச்சாட்டு கூறி மக்கள் மனதை கலைத்து ஆட்சியை கவிழ்க்க சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது எடப்பாடி தலைமையில் நடைபெறும் அரசு அம்மாவின் நல்லரசாகும். இது மக்களுக்காக உருவான அரசு. அதை அசைத்து பார்க்க எந்த கொம்பாதி, கொம்பனாலும் முடியாது. இரும்பு கோட்டையை எறும்புகளால் வீழ்த்த முடியாது. இமயமலையை ஈக்களால் சாய்த்து விட முடியாது. நம்மை சுலபமாக வீழ்த்திவிடலாம் என்று சிலர் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கின்றனர்.

அப்படி நினைப்பவர்கள் எதற்காக மெகா கூட்டணிக்கு முயற்சி செய்கிறார்கள்? புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என் மீது வந்து படுத்துக்கொள்ளுங்கள் என்று அலறுவது போல கூட்டணிக்கு வா... வா... என்று சிலர் கூவி கூவி அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். காரணம் நாம் அசுர பலத்தோடு இருக்கிறோம். தமிழக மக்கள் நமக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். எங்களிடம் இருந்து மக்களை பிரிக்க முடியாது. மக்களிடம் இருந்து எங்களையும் பிரிக்க முடியாது.

யாரை எதிர்த்து புரட்சி தலைவர் இயக்கத்தை உருவாக்கினாரோ, யாரை எதிர்ப்பதற்காக புரட்சி தலைவி கழகத்தை வழிநடத்தி வலுப்படுத்தினாரோ அந்த தீய சக்தியோடு கரம் கோர்த்து கழகத்தை கைப்பற்றிவிடலாம் என்று மனக்கணக்கு போடும் சிலரது செயல்பாடுகளை பார்க்கும் போது ‘கொள்ளையடிக்க போகிறவன் குருடனை துணைக்கு கூட்டிக்கொண்டு போனானாம்’ என்ற பழமொழி தான் எனக்கு நினைவிற்கு வருகிறது.

நீங்கள் யாரை வேண்டும் என்றாலும் கூட்டணிக்கு அழைத்துக்கொள்ளுங் கள். அதற்கெல்லாம் அம்மாவின் விசுவாச தொண்டர்கள் அஞ்ச மாண்டார்கள். எங்களுக்கு தர்மம், சத்தியம், நீதி, நேர்மை, வாய்மை, எம்.ஜி.ஆர். ஆசி என்றும் துணை நிற்கிறது. மேலும் புரட்சி தலைவி அம்மாவின் ஆன்மா என்றென்றும் எங்களுக்கு துணை நிற்கிறது. அந்த துணையோடு தமிழக மக்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம். எத்தனை சவால்கள் வந்தாலும் சந்திப்போம். எல்லாவற்றிலும் நாம் தான் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story