கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வர என்றைக்குமே திமுக தயாராக இல்லை மு.க.ஸ்டாலின் சொல்கிறார்
கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வர என்றைக்குமே திமுக தயாராக இல்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிஉள்ளார்.
சென்னை,
தேனாம்பேட்டையில் திருமண நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க.வை பொறுத்த வரை இன்று மக்களை காப்பாற்ற ஜனநாயகத்தை காப்பாற்ற போராடுகிறோம். இன்று இந்த ஆட்சியில் சுயமரியாதை இழந்திருக்கிறோம். தமிழ்நாட்டின் தன் மானத்தையே இன்றைக்கு போய் டெல்லியில் அடகு வைத்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். அதனால்தான் நீட் பிரச்சினை வந்துள்ளது. விவசாய பெருங்குடி மக்கள் பல கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். அதனால்தான் நெடுவாசல் பிரச்சினை இப்படி பல பிரச்சினைகள் நாட்டில் நடைபெற்றுள்ளது.
ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத ஒரு ஆட்சி அடிமையாக, கையை கட்டிக் கொண்டு, கூனி குறுகி மத்திய அரசின் காலில் விழுந்து கிடக்கிற ஒரு மானம் கெட்ட அரசாக இன்றைக்கு மாநிலத்திலே நம்முடைய மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
ஆக, இந்த நிலையில் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால் இதிலிருந்து தமிழ்நாட்டில் நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அல்ல, தமிழர்களுடைய உணர்வுகளை எண்ணி ஒரு நல்ல விடிவு காலத்தை தமிழகத்திற்கு ஏற்படுத்தி தர வேண்டும் என்ற ஒரு நல்ல நிலையில்தான் நாம் நம்முடைய கடமையையாற்ற உறுதி எடுத்து கொண்டிருக்கிறோம்.
அந்த உறுதியை காப்பாற்றுவதற்கு உறுதியை நிறைவேற்றுவதற்கு நீங்கள் எல்லாம் வரக் கூடிய காலகட்டத்திலே துணை நிற்க வேண்டும்.
233 எம்.எல்.ஏ.க்களில் 119யை கழித்தால் 114 வரும். ஆக இப்போது 114 எம்.எல்.ஏ.க்களுடன் ஆளும் கட்சியாக இருக்க கூடியது அ.தி.மு.க. அதை எதிர்க்கிற, தி.மு.க. உள்ளிட்ட எல்லா கட்சிகளையும் சேர்த்து பார்த்தால் 119. எண்ணிக்கை வரும். எனவே 119 பெரிதா? அல்லது 114 பெரிதா? இந்த கணக்கு கூட தெரியாமல் உள்ள கவர்னர் நமக்கு தேவையா? கவர்னருக்கு இந்த கணக்கு தெரியாதா? தெரியும். தெரிந்திருந்தும் கவலைப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம்? என்றால் மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவு.
இப்போது மத்தியில் இருக்க கூடிய ஆட்சி அந்த ஆட்சி, தி.மு.க. இதனால் பலன் அடைந்து விடக்கூடாது என்பதில் குறியாக உள்ளனர்.
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டால் 25 வருடத்துக்கு கழக ஆட்சியை அசைக்க முடியாது என்பது அவர்களுக்கு நல்லா தெரியும்.
ஆக அதற்கு திட்டமிட்டு, சதி செய்து, குறுக்கு வழியில், குறுக்கு புத்தியில் இன்றைக்கு பல காரிங்களை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த நிலைதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து விட்ட நிலையில் ஆட்சியை பிடிக்க தி.மு.க. கொல்லைப்புறமாக வர தயாராக இல்லை.
நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது அ.தி.மு.க. ஆட்சி எப்போது அகற்றப்படும் என்ற எண்ணம் எல்லோரது மனதிலும் உள்ளது.
எனவே பெரும்பான்மை இழந்த எடப்பாடி பழனிசாமி அரசு சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்த இன்று மாலை கவர்னரை சந்தித்து மீண்டும் மனு கொடுக்க உள்ளோம். தேவைப்பட்டால் ஜனாதிபதியையும் சந்தித்து முறையிடுவோம் என்றார்.
Related Tags :
Next Story