“பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும்” கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை


“பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும்” கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Sep 2017 12:15 AM GMT (Updated: 10 Sep 2017 6:20 PM GMT)

“பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும்” கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை,

முதல்-அமைச்சா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திரும்ப பெற்றனா்.

இதனால் அரசுக்கு போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால், சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிடவேண்டும் என்று கவர்னர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்கனவே கேட்டுக்கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில், தி.மு.க. சார்பில் மீண்டும் கவர்னரிடம் நேற்று மனு கொடுக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்), முகம்மது அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) உள்பட 10 பேர் கவர்னர் வித்யாசாகர் ராவை நேற்று மாலை 5 மணிக்கு நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் உடனடியாக சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் மனு ஒன்றை அளித்தார். அதற்கு கவர்னர், மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.

கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

26.8.2017 தேதியிட்ட என்னுடைய கடிதத்தை அடுத்து, மீண்டும் ஒருமுறை தமிழகத்தில் எழுந்துள்ள அரசியலமைப்பு நெருக்கடியை தங்களது கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். ஆளும் அ.தி.மு.க.வை சார்ந்த 21 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களை நேரடியாக சந்தித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக தெரிவித்து முதல்- அமைச்சர் தலைமையிலான அரசு மீது தங்களுடைய நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியதின் மூலம் இந்த நெருக்கடி உருவாகி உள்ளது.

ஏற்கனவே தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை சேர்ந்த 98 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள். மேலும் தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு, சபாநாயகர் உள்ளிட்ட 114 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே பெற்று உள்ளது, ஆனால், ஆளும் அரசுக்கு எதிரான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ளது (தி.மு.க-89; காங்கிரஸ்-8; இ.யூ.மு.லீக்-1 மற்றும் அதிருப்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்-21). எனவே, தற்போதைய முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை இழந்துள்ளார் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

சட்டத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாப்பேன், காப்பாற்றுவேன் என தாங்கள் (கவர்னர்) அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பதவிப்பிரமாணம் எடுத்துள்ளர்கள். ஆனால், இந்த விவகாரத்தில், தங்களுடைய நடவடிக்கைகள் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கும், சட்டங்களுக்கும் எதிரானதாகவும், மாறனதாகவும் அமைந்து உள்ளது.

எஸ்.ஆர்.பொம்மை வழக்கு மற்றும் அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே அரசியலமைப்பு சட்ட விதிகளின்படியும், ஜனநாயக அடிப்படையின்படியும் உடனடியாக எந்த வித தாமதமும் இல்லாமல் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது. பெரும்பான்மை இல்லாத இந்த அரசு இனியும் தொடர தாங்கள் அனுமதித்தால், அது பாராளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையான நோக்கங்களுக்கும், அரசியலமைப்பின் அடிப்படை கருத்துகளுக்கும், உச்சநீதிமன்றம் இது போன்ற விஷயங்களில் இதுவரை அளித்துள்ள தீர்ப்புகளுக்கும் எதிரானதாகும்.

பெரும்பான்மை இல்லாத அரசு தொடர்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்ல, ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாட்டை தோற்கடிக்க வழிவகுக்கும். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதில் ஏற்படும் சிறு தாமதம் கூட, தமிழகத்தில் குதிரை பேரத்தை ஊக்குவிப்பதோடு, முறையற்ற அரசியல் நடவடிக்கைகள் மாநிலத்தில் நடைபெற வழிவகுத்து விடும்.

இதுவரையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடாமல் தவிர்ப்பது, தங்களுடைய செயல்பாடுகளில் பாரபட்சமிருப்பதாக வலுவான சந்தேகம் எழுகிறது. தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் நீங்கள் உடனடியாக தலையிட்டு, இனியும் எவ்வித தாமதமுமின்றி, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சியையும், ஜனநாயகத்தையும் மீண்டும் நிலைநிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் வகையில், அவர்களது கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதே தினத்தில் டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள் கவர்னரை சந்தித்து அந்த பிரச்சினையை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அந்த 22 பேரில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் திடீரென எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாக செய்திகள் வந்தன.

அப்படி பார்த்தாலும், ஆளும் கட்சியில் உள்ள உறுப்பினர்களில் 21 பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மை. அதேபோல தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 98 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசை ஏற்க முடியாது என்று கடிதம் அளித்துள்ள 21 பேர், ஆக, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, இருக்கக்கூடிய 233 பேரில், 119 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், 114 பேர் மட்டுமே இந்த அரசுக்கு ஆதரவு என்ற நிலை உள்ளது.

எனவே, 119 என்ற எண்ணிக்கை பெரியதா? அல்லது 114 பெரியதா? என்பதைத்தான் இன்றைக்கு கவர்னரிடம் சுட்டிக்காட்டி, வலியுறுத்தி, வற்புறுத்தி இருக்கிறோம். முதல்-அமைச்சருக்கு மெஜாரிட்டி உள்ளதா?, இல்லையா? என்பதை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும். அதை கவர்னர் மாளிகையில் நிரூபிக்க முடியாது. இதையும் கவர்னரிடம் நாங்கள் எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.

இதனை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளாக உள்ள நாங்கள் பலமுறை கவர்னரை சந்தித்து மனுக்கள் அளித்து, விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறோம். “எனவே, இதுவே கடைசிமுறையாக இருக்க வேண்டும். உரிய நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும். உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட உத்திரவிடுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இன்னும் ஒரு வாரகாலத்துக்குள் சட்டமன்றத்தை கூட்டி, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சட்டரீதியாக நாங்கள் நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம்” என்பதையும் கவர்னரிடம் நாங்கள் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறோம். எங்களுடைய கோரிக்கையைப் பரிசீலித்து, சட்டமன்றத்தைக் கூட்ட நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்திருக்கிறது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

இதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவீர்களா? தி.மு.க.வின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பதில்:- சட்டமன்றத்தை கூட்டினால் கொண்டு வருவோம். கவர்னர் என்ன நடவடிக்கையை எடுக்கிறார் என்பதை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம்.

கேள்வி:- சபாநாயகரை நேரில் சந்தித்து, சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைப்பீர்களா?

பதில்:- அதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை. அவர் ஏற்கனவே சட்டமன்றத்தை முடித்து வைத்திருக்கிறார். மறுபடியும் சட்டமன்றம் கூட வேண்டுமென்றால், கவர்னர் தான் கையெழுத்திட வேண்டும்.

கேள்வி:- கருப்பு பணம் ஒழிக்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு தெரிவிக்கும் நிலையில் 246 கோடி ரூபாய் கருப்பு பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதே?

பதில்:- திருச்செங்கோட்டில் உள்ள ஒரு வங்கியில் 246 கோடி ரூபாய் கருப்பு பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக நானும் பத்திரிகை மூலம் தெரிந்துகொண்டேன். அது தமிழகத்தின் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பினாமி பணம் என்றும், அதில், 50 சதவீத பணத்தை வரியாக கட்டியிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. அந்த அமைச்சர் யார் என்பதை ஊடகங்கள் வெளியிட்டால் நாட்டுக்கும் நன்மை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story