ஈஷா யோகா மையம் மரக்கன்றுகள் நட தமிழக அரசு துணை நிற்கும் எடப்பாடி பழனிசாமி


ஈஷா யோகா மையம் மரக்கன்றுகள் நட தமிழக அரசு துணை நிற்கும் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 11 Sep 2017 12:00 AM GMT (Updated: 10 Sep 2017 6:23 PM GMT)

மரங்கள் நடுவதற்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

புறம்போக்கு நிலங்களில் ஈஷா யோகா மையம் சார்பில் மரங்கள் நடுவதற்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ‘நதிகளை மீட்போம்’ என்னும் தேசிய அளவிளான விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி உள்ளார். இதன் மூலம் நதிகள் மீட்பின் அவசியத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் செப்டம்பர் 3-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை 30 நாட்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டார். அதன்படி ஜக்கி வாசுதேவ் கடந்த 3-ந் தேதி நதிகள் இணைப்பு விழிப்புணர்வு பயணத்தை கோவையில் தொடங்கினார்.

பின்னர் கன்னியாகுமரி, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலும், கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்களிலும் விழிப்புணர்வு பயணம் நடைபெற்றது.

இந்த நிலையில், ஜக்கி வாசுதேவ் தலைமையில் ‘நதிகளை மீட்போம்’ விழிப்புணர்வு கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மரங்களை நடுவதன் மூலம் நதிகளை பாதுகாப்பது, போன்ற இயற்கையை பேணி காக்கும் நிகழ்வுகள் மீது ஜெயலலிதா மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார்.

நதிகள் இணைப்பு திட்டத்தினை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தனக்குள்ள அதிகாரத்தின் மூலம் ஒரு சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்றும், தேசிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்திற்கு துரிதமாக செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

நீர்வளங்களுக்கு ஆதாரமாக உள்ள காடுகளையும், மரங்களையும் பேணி பாதுகாப்பதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாடு வனத்துறையின் மூலம் பசுமை போர்வையினை மேம்படுத்தவும், மரங்களின் பயன்பாட்டினை நீட்டிக்கவும் வனங்களுக்கு உள்ளேயும், வெளியேயும், 7.55 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு வன வளங்கள் பாதுகாக்கப்பட்டு, பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வார்தா புயல் காரணமாக சென்னை மாநகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் மேலான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இழந்த பசுமை போர்வையினை மீட்டெடுக்கும் பொருட்டு சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடுவதற்காக ரூ.13.42 கோடி செலவில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் தமிழக அரசின் சீரிய கவனத்தில் உள்ளது என்பதை தெரிவித்து, மேலும் ஈஷா யோகா மையத்தை சார்ந்த சத்குரு நதிகளை மீட்போம் என்ற இயக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

அரசு புறம்போக்கு நிலங்களில் இந்த ஈஷா யோகா மையத்தை சார்ந்தவர்கள் மரக்கன்றுகள் நட முன்வந்தால், அதற்கான அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும். சத்குரு எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை தொடங்கினாரோ, அந்த இயக்கம் வெற்றி பெற நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

நதி என்பது மனிதகுலத்துக்கு இயற்கை அளித்த நன்கொடை. நதிகளை போற்றி நாடும் வளர வேண்டும் என்ற பாடல் மூலம் நதிகள் இணைப்பு குறித்து எம்.ஜி.ஆர். வலியுறுத்தி இருக்கிறார்.

நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்க மழைநீர் சேகரிப்பு திட்டத்தையும் ஜெயலலிதா கொண்டு வந்தார். அதனை நாம் தற்போது செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு நீர்நிலைகளை தூய்மை செய்வதற்காக குடிமராமத்து பணிகளை செம்மையாக நிறைவேற்றி கொண்டு இருக்கிறது.

ஆறுகளை காக்க, சுற்றுச்சூழலை மேம்படுத்த வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து வருங்கால தலைமுறையினருக்கு நாம் எடுத்து சொல்ல வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையை விட தண்ணீர் விலை அதிகம் என்று சொல்லக்கூடிய நிலை வராமல் இருக்க ஒன்றுப்பட்டு பாடுபாட வேண்டும். தாமிரபரணி, கருமேனி, நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைப்பது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் 5 ஆறுகளை இணைக்கும் பணிகளும் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:-

தமிழக அரசின் புறம்போக்கு நிலங்களில் நாங்கள் மரம் நடுவதற்கு அரசு உறுதுணை நிற்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதற்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதே வேளையில் அரசுக்கு கோரிக்கையும் வைக்கிறேன். கிராமங்களில் 1 ஏக்கர் நிலமும், குக்கிராமங்களில் ½ ஏக்கர் நிலமும் வழங்கினால், நாங்கள் அதில் 5 வகையான பழ மரங்களை நடுவோம். அந்த மரத்தில் விளையும் பழங்களை 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அவர்களாகவே பறித்து உண்ணும் நிலையை ஏற்படுத்தி தருவோம்.

மற்றொரு கோரிக்கையும் இங்கே நான் வைக்கிறேன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி மாதத்தில் மரங்களை நட வேண்டாம். ஏனென்றால் மரங்கள் வளர்வதற்கு அது உகந்த மாதம் இல்லை. எனவே அவருடைய பிறந்தநாளையொட்டி ஜூலை மாதம் மரங்களை நடுங்கள். அது தான் மரங்கள் வளர்வதற்கு உகந்த மாதம் ஆகும்.

கர்நாடகம், தமிழகம் என்று மொழிகளில் நாம் நதிகளை பிரித்து பார்க்கிறோம். ஆனால் நதிகளுக்கு மொழி தெரியாது. கர்நாடக மாநிலத்தில் 25 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் காவிரி ஆற்றில் நீர் வளம் அதிகரித்து, கர்நாடக மாநில மக்கள், விவசாயிகள் மட்டுமின்றி, தமிழக மக்களும், விவசாயிகளும் பயன் பெறுவார்கள்.

நதிகள் கரையோரம் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மரக்கன்றுகளை நட்டால், நதிகள் வற்றிப்போகாமல் பாதுகாக்க முடியும். அதற்கான திட்டமும் எங்களிடம் உள்ளது. நதிகள் பாதுகாப்பு என்பது நாட்டின் மிக முக்கியமான அம்சம் ஆகும். எனவே நாட்டு மக்கள் அனைவரும் நதிகளை மீட்க ஒன்று இணைவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அப்பல்லோ குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டி, சி.ஐ.ஐ. (தமிழ்நாடு) தலைவர் ரவிச்சந்திரன், நடிகர் விவேக், நடிகை சுஹாசினி மணிரத்னம், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், அவரது மனைவி ஷோபா, கர்நாடக இசை கலைஞர் சுதா ரகுநாதன் உள்பட பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

மேலும், திரைப்பட பாடகர் கார்த்திக், பாடகி உஷா உதுப் ஆகியோரது இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Next Story