ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம்


ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Sep 2017 9:45 PM GMT (Updated: 10 Sep 2017 6:52 PM GMT)

சென்னையில் ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டமும், நாளை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்த முடிவு செய்துள்ளனர்.

சென்னை,

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டமும், நாளை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்த முடிவு செய்துள்ளனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ‘ஜாக்டோ- ஜியோ’ அமைப்பு சார்பில் கடந்த 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக ‘ஜாக்டோ- ஜியோ’வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த இளங்கோ, கணேசன் ஆகியோர் நீக்கப்பட்டு, சுப்பிர மணியன் மற்றும் மாயவன் ஆகியோர் புதிய ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து ‘ஜாக்டோ-ஜியோ’ 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது.

இதில் இளங்கோ, கணேசன் தலைமையில் செயல்படும் ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பினர் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்து உள்ளதாகவும், விரைவில் போராட்ட அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்து உள்ளனர்.

அதேவேளையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன் மற்றும் மாயவன் ஆகியோர் தலைமையிலான ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பினர் அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கி உள்ளனர். இதுதொடர்பாக சென்னையில் நேற்று ‘ஜாக்டோ-ஜியோ’ அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. சென்னை மாவட்ட ‘ஜாக்டோ-ஜியோ’ ஒருங்கிணைப்பாளர் டேனியல் ஜெயசிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்துவது என்றும், பல வகையான போராட்டங்கள் நடத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் செப்டம்பர் 11-ந்தேதி (இன்று) காலை 10.30 மணியளவில் ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும்.

* சென்னை கலெக்டர் அலுவலகத்தை செப்டம்பர் 12-ந்தேதி (நாளை) காலை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவேண்டும்.

* சென்னை எழிலக வளாகத்தில் அரசின் நல்ல பதிலுக்காக காத்திருப்பு போராட்டம் நடத்தவேண்டும்.

இவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story