தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 25 ஆண்டுகள் அசைக்க முடியாது மு.க.ஸ்டாலின்


தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 25 ஆண்டுகள் அசைக்க முடியாது மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 10 Sep 2017 7:30 PM GMT (Updated: 10 Sep 2017 7:13 PM GMT)

மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றார்.

சென்னை,

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 25 ஆண்டுகள் அசைக்க முடியாது என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றார். விழாவில், அவர் பேசியதாவது:-

சட்டமன்றத்தில் தற் போதுள்ள 233 உறுப்பினர்களில் மெஜாரிட்டி என்று பார்த்தால் 116 பேர் ஆதரவு இருக்க வேண்டும். ஆனால், அந்த நிலை இன்று இல்லை. 233 பேரில் 114 பேரின் ஆதரவு மட்டுமே ஆளும் கட்சிக்கு இருக்கிறது. இதில் 119 என்ற எண்ணிக்கை பெரிதா, 114 பெரியதா? இந்தக் கணக்கு கூட தெரியாத ஒரு கவர்னர் நமக்குத் தேவையா? அவருக்கு நன்றாகவே கணக்கு தெரியும். தெரிந்தும் அமைதியாக இருக்கக் காரணம் மேலிருந்து வந்துள்ள உத்தரவு.

மத்திய பா.ஜ.க. அரசின் உத்தரவால், மெஜாரிட்டியை இழந்துவிட்ட பிறகும் இந்த அரசு தொடர்கிறது. காரணம், தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தி.மு.க.வை அசைக்க முடியாது. இது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, திட்டமிட்டு, சதி செய்து, குறுக்கு புத்தியுடன், குறுக்கு வழியில் பல காரியங்களை இன்றைக்கு அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே, நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக இல்லை, இந்த நிலையில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, ஒரு நல்ல விடிவுகாலத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, நாம் நமது கடமைகளை ஆற்ற உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story