அ.தி.மு.க. சார்பில் இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை இல்லை


அ.தி.மு.க. சார்பில் இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை இல்லை
x
தினத்தந்தி 12 Sep 2017 12:30 AM GMT (Updated: 11 Sep 2017 9:01 PM GMT)

அ.தி.மு.க. (அம்மா), அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) ஆகிய அணிகள் சார்பில் இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

சென்னை,

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. (அம்மா) என்ற பெயரில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) என்ற பெயரில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வந்தது.

இந்த இரு அணிகளும் கடந்த மாதம் 21-ந் தேதி ஒன்றாக இணைந்தன. இதற்கிடையே அ.தி.மு.க. (அம்மா) அணியைச் சேர்ந்த துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் புதிய அணி உருவானது. இந்த அணியால் அ.தி.மு.க.வில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 750 செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 2,300 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, பொதுக்குழுவை கூட்ட தடை விதிக்க கோரி டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வெற்றிவேல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக கடந்த 28.8.2017 அன்று பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் அ.தி.மு.க. (அம்மா), அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) என்று இரு அணிகளின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், அந்த கடிதத்தில், பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது யார் என்பது பற்றி தெரிவிக்காமல் நிர்வாகி என்று மட்டும் குறிப்பிடப்பட்டு உள்ளது. பொதுச்செயலாளர் இல்லாதபட்சத்தில், துணை பொதுச்செயலாளர் தான் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. யாருக்கு சொந்தம் என்ற விவகாரம் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பொதுக்குழு 12-ந் தேதி (இன்று) நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. யாருக்கு என்ற விவகாரம் நிலுவையில் உள்ளபோது, பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம். எனவே, பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நேற்று நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ஏன் ஒரே ஒருவர் மட்டும் தடைகேட்டு வந்து உள்ளார்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல், “மனுதாரர் அக்கட்சியின் உறுப்பினர் என்ற முறையில் தடை கேட்டு உள்ளார்” என்றார்.

அப்போது நீதிபதி, உங்கள் அணியும் (டி.டி.வி.தினகரன் அணி) பொதுக்குழுவில் கலந்து கொள்ளலாமே என்றார். அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல், இந்த பொதுக்குழு கூட்டம் விதிகளுக்கு எதிரானது என்று கூறினார்.

உடனே நீதிபதி, பொதுக்குழு கூட்டம் விதிகளுக்கு எதிரானது என்றால், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகலாமே? என்று தெரிவித்தார். மேலும், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், மனுதாரர் அதை நிராகரித்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுக்கலாம் அல்லது எம்.எல்.ஏ. என்ற முறையில் மக்கள் பணியை செய்யலாமே என்றார்.

மேலும் ‘டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக இருந்து வரும் மனுதாரர், டி.டி.வி.தினகரனை இந்த வழக்கில் 4-வது எதிர்மனுதாரராக சேர்த்துள்ளார். இந்த செயல் கண்டனத்துக்கு உரியது. இதுபோன்று உள்நோக்கம் கொண்ட செயல்களை கோர்ட்டு ஒருபோதும் அனுமதிக்காது. மனுதாரர் விருப்பப்பட்டால் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். அவருக்கு விருப்பம் இருந்தால், கூட்டத்தில் மதியம் உணவு அருந்தி விட்டு வரலாம். கூட்டத்துக்கு செல்ல விரும்பவில்லை என்றால், புறக்கணிக்கலாம்’ என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதன்பின்பு, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரர் வெற்றிவேலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததோடு, இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் இந்திய தேர்தல் ஆணையத்தை அணுக சட்டப்படியான உரிமை உள்ளது என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து வெற்றிவேல் எம்.எல்.ஏ. ஐகோர்ட்டில் உடனடியாக மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனு மாலை 5 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை நீதிபதிகள் ராஜீவ் சக்தேர், அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரித்தனர்.

விசாரணையின் போது வெற்றிவேல் எம்.எல்.ஏ. தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், “அ.தி.மு.க. (அம்மா), அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) என்ற பெயரில் கட்சியே இல்லை. அப்படி இருக்கும்போது எந்த அடிப்படையில் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்க முடியும்? தேர்தலுக்காக வழங்கப்பட்ட பெயர்களை வைத்து பொதுக்குழு கூட்டப்படுகிறது. இந்த பொதுக்குழு கூட்டம் தேர்தல் ஆணையத்தை அவமதிக்கும் செயல் ஆகும். யார் உண்மையான அ.தி.மு.க. என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். இரு அணிகள் இணைப்பு என்பதை தேர்தல் ஆணையத்தால் மட்டுமே மேற்கொள்ள முடியும். தற்போது நடைபெற்ற இணைப்பு முறையானது அல்ல” என்றார்.

உடனே நீதிபதிகள் குறுக்கிட்டு, அப்படியென்றால் ஏன் தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு டி.டி.வி.தினகரன் தரப்பு வக்கீல், “கட்சி, சின்னம் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் டி.டி.வி.தினகரகனுக்கு தான் உள்ளது. இரு அணிகள் இணைந்ததை தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. பொதுச்செயலாளர் இல்லாதபோது துணை பொதுச்செயலாளர் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது. துணை பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே, பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘டி.டி.வி.தினகரன் பொதுக்குழு உறுப்பினர் இல்லை. அ.தி.மு.க. அம்மா அணி, புரட்சி தலைவி அம்மா அணி ஆகிய இரு அணிகள் இணைந்தது தொடர்பாக பேசவே பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டம் தேர்தல் ஆணைய உத்தரவை மீறியது என்றால் தேர்தல் ஆணையத்தை அணுகி இருக்க வேண்டும். எனவே, வெற்றிவேல் எம்.எல்.ஏ.வின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மாலை 6.45 மணி வரை இந்த விசாரணை நடந்தது. பின்னர் மனுவின் மீது உத்தரவு பிறப்பிப்பதை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இதற்கிடையே பொதுக்குழுவை கூட்ட தடை விதிக்க கோரி டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான வா.புகழேந்தி பெங்களூரு சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி நாகலிங்க கவுடா, அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட இடைக்கால தடை விதித்து நேற்று மாலை உத்தரவிட்டார். அத்துடன் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதனால் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்தது.

இந்த நிலையில், வெற்றிவேலின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ராஜீவ் சக்தேர், அப்துல் குத்தூஸ் ஆகியோர், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தனர்.

அத்துடன் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானம் இந்த வழக்கின் பிரதான வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டதாகும் என்று கூறிய நீதிபதிகள் பிரதான வழக்கை அடுத்த மாதம் (அக்டோபர்) 23-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story