டாஸ்மாக் கடையை மூட பெண்கள் முற்றுகை போராட்டம்; மதுக்குடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மது பிரியர்கள்


டாஸ்மாக் கடையை மூட பெண்கள் முற்றுகை போராட்டம்; மதுக்குடித்து  போராட்டத்தில் ஈடுபட்ட மது பிரியர்கள்
x
தினத்தந்தி 12 Sep 2017 8:05 AM GMT (Updated: 12 Sep 2017 8:05 AM GMT)

டாஸ்மாக் கடையை மூட பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர் அதற்கு எதிராக மதுக்குடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மது பிரியர்கள்



தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் செயல்படும் மதுபான கடைகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் நெடுஞ்சாலைகளின் அருகில் செயல்பட்ட ஏராளமான மதுக்கடைகள் மூடப்பட்டன.

குமரி மாவட்டத்திலும் இதைபோல மதுக்கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மதுக்கடைகளை மூட உத்தர விட்ட தங்களது தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டு சில திருத்தங்களை அறிவித்தது. அதை தொடர்ந்து மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க பல இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டரிடமும்  அவர்கள் மனு கொடுத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் குருந்தன் கோடு சானல் கரையில் கோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறக்கப்போவதாக  அந்த பகுதியில் தகவல் பரவியது. உடனே அந்த பகுதியைச் சேர்ந்த திரளான பெண்கள் அங்கு சென்று அந்த மதுக்கடையை நேற்று முற்றுகையிட்டனர். மதுக்கடையை மீண்டும் திறக்கக் கூடாது என்று அவர்கள் கோஷம் போட்டனர்.

இதற்கிடையில் சில மது பிரியர்களும் அங்கு திரண்டனர். அவர்கள் மதுக்கடை அருகே சாலையில் அமர்ந்து மதுக்குடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மதுக்கடையை மீண்டும் திறக்க வேண்டுமென்று அவர்கள் கோஷம் போட்டனர்.

அப்போது மது பிரியர்கள் கூறும்போது, இந்த மதுக்கடையை மூடியதால் நாங்கள் மது வாங்க 3 கிலோ மீட்டர் வரை செல்ல வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்தனர். மேலும் தமிழக அரசின் தாலிக்கு இலவச தங்கம், இலவச அரிசி போன்ற திட்டங்களை வேண்டுமென்று கூறுகிறவர்கள் ஏன்? மதுக் கடையை மட்டும் வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்று சில மது பிரியர்கள் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசப்படுத்தி கலைந்து செல்ல செய்தனர்.

ஆனால் மதுக்கடையை முற்றுகையிட்ட பெண்கள், போலீசார் சமரசம் செய்த போதும், தாங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர். பூட்டப்பட்ட மதுக்கடைக்குள் மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மதுபானங்களை அங்கிருந்து அகற்றினால்தான் தாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று அவர்கள் உறுதியாக கூறி விட்டனர். மேலும் அந்த 
பெண்கள், மதுக்கடையை முற்றுகையிட்டு விடிய விடிய அங்கேயே போராட்டம் 
நடத்தினார்கள். இரவு அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.

இன்று 2-வது நாளாக அந்த பெண்களின் முற்றுகை போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று காலை பெண்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தி  தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். வெள்ளிச்சந்தை போலீசார் இன்று காலை அங்கு சென்று பெண்களிடம் போராட்டத்தை கைவிடும் படி கேட்டுக் கொண்டனர்.
ஆனால் அந்த மதுக்கடையில் உள்ள மதுபானங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிடு முடியாது என்று அந்த பெண்கள் கூறி விட்டனர். இதனால் 2-வது நாளாக இந்தப் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அங்கு பரபரப்பான சூழ்நிலையும் நிலவி வருகிறது.

இதற்கிடையில் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக 6 பேர் மீது வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story