நீலத்திமிங்கல விளையாட்டு: மத்திய-மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


நீலத்திமிங்கல விளையாட்டு:  மத்திய-மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 Sep 2017 9:15 PM GMT (Updated: 12 Sep 2017 7:56 PM GMT)

நீலத்திமிங்கல விளையாட்டை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

புளூ வேல் எனப்படும் நீலத்திமிங்கல விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சினை குறித்து மதுரை ஐகோர்ட்டு தானாக முன்வந்து (சூ-மோட்டோ) வழக்கு பதிவு செய்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

உலகமே இணையதளத்தில் மூழ்கியுள்ளது. இதில் நல்லதும் உள்ளது, கெட்டதும் உள்ளது. நீலத்திமிங்கல விளையாட்டு மூலம் இணையதளத்தில் உள்ள கெட்டவை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சமுதாயத்தை காப்பாற்றுவதில் அனைவருக்கும் பங்கு உண்டு. இதுபோன்ற சூழ்நிலையில் கோர்ட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

நீலத்திமிங்கல விளையாட்டில் இருந்து மக்களை, குறிப்பாக இளைஞர்களை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகளுக்கு கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறோம்.

தடுக்க வேண்டும்

இணையதளம் வழியாக நீலத்திமிங்கல விளையாட்டின் இணைப்புகள் வழங்கப்படுவதை தடுக்கவும், இதுதொடர்பாக இந்தியாவில் இருந்து கேட்கப்படும் தகவல்களை உடனே வழங்கும் வகையில் இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களை இந்திய சட்டவரம்புக்குள் கொண்டு வருவதற்கும் மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தகவல் தர மறுக்கும் இணையதள சேவை நிறுவனங்களை இந்தியாவில் நுழைய விடாமல் தடுக்க வேண்டும்.

நீலத்திமிங்கலம் விளையாடியவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு செல்போன், லேப்டாப், டேப்லட், கம்ப்யூட்டர் ஆகியவற்றை மத்திய அரசின் சி.இ.ஆர்.டி. நிறுவனத்திடம் வழங்கி தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதன்மூலம் நீலத்திமிங்கல விளையாட்டு எங்கிருந்து பெறப்படுகிறது, அதை நிர்வகிப்பது யார் என்பதை கண்டறிய முடியும். முகநூல், டுவிட்டர், டார்க்நெட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக நீலத்திமிங்கல விளையாட்டு இணைப்புகள் பகிரப்படுவதை இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் உடனடியாக தடுக்க வேண்டும்.

சட்டத்துக்கு உட்பட வேண்டும்

தூதரக உறவின் மூலம் ரஷியாவுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு நீலத்திமிங்கல விளையாட்டு இணைப்புகளை நிரந்தரமாக முடக்கவும், இதில் தொடர்புடையவர்களை சட்டப்படி தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் அந்த நிறுவனங்களின் அலுவலகம் செயல்படும் நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுகின்றன. இதனால் பல நேரங்களில் இந்தியாவில் இருந்து கேட்கப்படும் தகவல்கள் தர மறுக்கப்படுகின்றன. கடந்த மே மாதம் கூகுள் நிறுவனத்திடம் மத்திய அரசு சில தகவல்கள் கேட்டபோது, அந்நிறுவனம் அமெரிக்க சட்டப்படி இயங்குவதால் தகவல் அளிக்க மறுத்துவிட்டது. இதை கவனத்தில் கொண்டு வெளிநாடுகளை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களின் இந்திய பிரிவுகளை இங்குள்ள சட்டத்துக்கு உட்படுத்த வேண்டும்.

தமிழக அரசு செய்ய வேண்டியது

தமிழகத்தில் நீலத்திமிங்கல விளையாட்டை கட்டுப்படுத்தவும், இந்த விளையாட்டிலிருந்து இளைஞர்களை பாதுகாக்கும் பணியிலும் சைபர் குற்றத்தடுப்பு நடவடிக்கையில் அனுபவம் மிக்க ஐ.பி.எஸ். அதிகாரி முருகனை மேற்பார்வையாளராக (நோடல் ஆபீசராக) உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். இவர் இணையதளங்களில் இருந்து நீலத்திமிங்கல இணைப்புகளை நீக்கவும், பயன்படுத்துவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேவையான ஊழியர்களையும் கட்டமைப்பு வசதிகளையும் அரசு வழங்க வேண்டும். ஐ.பி.எஸ். அதிகாரி முருகன் தனது பணிக்காக சைபர் குற்றத்தடுப்பில் அனுபவம் உள்ள சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. லாவண்யா மற்றும் போலீஸ் அதிகாரிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். கல்வித்துறை சார்பில் நீலத்திமிங்கல விளையாட்டு மட்டுமின்றி டிஜிட்டல் உலகினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

இதற்காக மாவட்ட, தாலுகா அளவில் தொண்டு நிறுவனத்தினர், மனோதத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டும். மதுரையில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். 

Next Story