தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்கக் கூடாது தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்


தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்கக் கூடாது தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Sep 2017 10:15 PM GMT (Updated: 12 Sep 2017 8:05 PM GMT)

இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாகவும், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்கக் கூடாது என்றும் வைகோ கூறியுள்ளார்.

சென்னை, 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசுக்கு உத்தரவு

“தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். மாவட்டந்தோறும் 30 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தர வேண்டும்; 8 வாரங்களுக்குள் தடையில்லா சான்றிதழ் வழங்குவதுடன், நவோதயா பள்ளிகள் அமைக்கத் தேவையான உள் கட்டமைப்புகளை அமைத்துத் தர வேண்டும்” என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நவோதயா பள்ளிகள் தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் போதிய கல்வி வசதிகள் உள்ளன. மாநில பாடத்திட்டம், மத்திய பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பாடத்திட்டங்களை கற்பிக்கும் கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் தமிழகத்துக்கு நவோதயா பள்ளிகள் தேவையில்லை என்பது கொள்கை முடிவாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதே நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு முன்வர வேண்டும்.

டெல்லி பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு மற்றும் சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி அரசு பலியாகிவிடக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் திறக்க வேண்டும், அதுகுறித்து தமிழக அரசு 8 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்’, எனும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த ஆணை மாநில அரசின் கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரத்தில் தலையிடுகிறது. இந்த ஆணையை தமிழக அரசு ஏற்கக் கூடாது. இதை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். நவோதயா பள்ளிகளை ஐகோர்ட்டு மூலம் தமிழ்நாட்டின் மீது திணிப்பதற்கு பா.ஜ.க. செய்து வரும் முயற்சியை முறியடித்து, தமிழ்நாட்டின் கல்வி காவி மயமாகாமல் தடுப்பதற்குத் தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story