நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. கொண்டுவரும் -மு.க.ஸ்டாலின் பேட்டி
சட்டமன்றத்தை கூட்டினால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. நிச்சயம் கொண்டுவரும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-
உட்கட்சி விவகாரம்
கேள்வி:- இறந்தவர்தான் நிரந்தர பொதுச் செயலாளர் என்று அ.தி.மு.க. பொதுக்குழுவில் அறிவித்திருக்கிறார்களே, அதை பற்றி உங்கள் கருத்து என்ன?.
பதில்:- அது அவர்கள் கட்சி. அது அவர்கள் கட்சியின் உட்கட்சி விவகாரம். அதில் நான் தலையிட விரும்பவில்லை.
கேள்வி:- அ.தி.மு.க. அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று தி.மு.க. கூறிவருகிறது. அதற்கான கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது என நினைக்கிறீர்களா?. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று தினகரனும் சொல்லியிருக்கிறாரே?.
பதில்:- அதற்கெல்லாம் பதில்சொல்ல நான் தயாராக இல்லை. நாங்கள் நேற்று முன்தினம் கவர்னரிடம் சென்று தெளிவாக கூறிவிட்டு வந்திருக்கிறோம். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னருக்கு இருக்கக்கூடிய பொறுப்பு, கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம்.
அப்படியில்லை என்றால், விரைவில் நீதிமன்றத்தை நாடுவோம், மக்கள் மன்றத்தை சந்திப்போம் என்று தெளிவாக சொல்லியிருந்தோம். அந்த அடிப்படையில், இன்று நீதிமன்றத்திற்கு சென்றாயிற்று, வழக்கும் தொடுத்தாயிற்று. அந்த வழக்கின் அடிப்படையில், ஜனநாயக அடிப்படையில் கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறோம்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
கேள்வி:- அ.தி.மு.க. அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்களே?.
பதில்:- பெரும்பான்மை இருக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள். சட்டமன்றத்தை கூட்டக்கூடிய அதிகாரம் இப்போது யாருக்கு இருக்கிறது என்றால், கூட்டத்தொடரை ஏற்கனவே முடித்தாயிற்று, முடித்த பிறகு மீண்டும் கூட்டக்கூடிய அதிகாரம் கவர்னருக்குத்தான் இருக்கிறது. ஒருவேளை முதல்-அமைச்சருக்கு தன் மீதான நம்பிக்கையை நிரூபிக்கக்கூடிய தைரியம் இருந்தால், அவரே கவர்னரிடம் பரிந்துரை செய்தால் சட்டமன்றத்தை கூட்டுவார்கள். அப்படி கூட்டினார்கள் என்றால், நிச்சயமாக தி.மு.க. சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம்.
கேள்வி:- உங்களைப் பற்றி எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளாரே?.
பதில்:- முதலில் மெஜாரிட்டியோடு அவர் முதல்-அமைச்சராக இருந்துகொண்டு கேள்விகள் கேட்கட்டும், பிறகு பதில் சொல்கிறேன்.
விளம்பரம் சேர்க்க விரும்பவில்லை
கேள்வி:- தனக்கும் தி.மு.க.விற்கு மட்டுமே போட்டி என்று டி.டி.வி.தினகரன் சொல்லியிருக்கிறாரே?.
பதில்:- அவருடைய விளம்பரத்திற்காக அவர் அப்படி சொல்லலாம். அதற்கு நான் விளம்பரம் சேர்க்க விரும்பவில்லை.
கேள்வி:- சட்டசபையில் உங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பீர்களா?. அல்லது தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வருவீர்களா?.
பதில்:- தொடர்ந்து தி.மு.க.வின் கொள்கை மற்றும் தலைவர் கருணாநிதியின் உணர்வு எல்லாமே கொல்லைப்புறமாக என்றைக்கும் தி.மு.க. ஆட்சிக்கு வர விரும்பியது இல்லை, வரவும் வராது.
கேள்வி:- அனிதா மரணம் தமிழக அரசின் அலட்சியப் போக்கினால் தான் நடந்தது என ஐகோர்ட்டு நீதிபதி சொல்லியிருக்கிறாரே?.
பதில்:- இதை நாங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே தான் இருக்கிறோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
Related Tags :
Next Story