பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி மு.க.ஸ்டாலின் வழக்கு


பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி மு.க.ஸ்டாலின் வழக்கு
x
தினத்தந்தி 12 Sep 2017 11:30 PM GMT (Updated: 12 Sep 2017 8:58 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி தமிழக கவர்னருக்கு உத்தரவிடக்கோரி மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்க வேண்டும். ஆனால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 113 பேரின் ஆதரவு மட்டுமே உள்ளது. ஏற்கனவே அவருக்கு ஆதரவளித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் ஆதரவை வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

தி.மு.க. மற்றும் அதன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 119 ஆக இருப்பதால் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது.

எனவே, பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக கவர்னரை சந்தித்து 2 முறை மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பொது பார்வையாளர்

பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிடுவதில் தாமதத்தை ஏற்படுத்துவது குதிரைபேரத்துக்கு வழிவகுக்கும். போதிய பெரும்பான்மை இல்லாமல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுகிறது.

எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவடையும் வரை அரசின் முக்கிய முடிவுகள் அல்லது கொள்கை முடிவுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று இந்த கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுபோன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்பட்சத்தில் வாக்கெடுப்பை மேற்பார்வையிட பொது பார்வையாளர் ஒருவரை நியமித்து, அவர் முன்னிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 

Next Story