144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் காவிரி மகாபுஷ்கர விழா தொடங்கியது


144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் காவிரி மகாபுஷ்கர விழா தொடங்கியது
x
தினத்தந்தி 12 Sep 2017 11:30 PM GMT (Updated: 12 Sep 2017 9:01 PM GMT)

மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் காவிரி மகாபுஷ்கர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மயிலாடுதுறை,

இந்தியாவில் உள்ள 12 புண்ணிய நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு நதி என 12 ராசிகளுக்கும் 12 நதிகள் புஷ்கர நதிகளாக கூறப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ, அந்த ஆண்டு அந்த ராசிக்கான நதியில் புஷ்கரம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியானார். அதைத் தொடர்ந்து துலாம் ராசிக்கு உரிய காவிரி ஆற்றில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

தற்போது இந்த புஷ்கர விழா காவிரியில் 144 ஆண்டுகளுக்கு பிறகு வருவதால் காவிரி மகாபுஷ்கர விழா என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த விழா நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள காவிரி ஆறு துலா கட்டத்தில் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காவிரி தாய் சிலைக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கடம்புறப்பாடு நடைபெற்றது. காலை 8.25 மணிக்கு காவிரி ஆற்றில் புஷ்கர பிரவேசம் நடைபெற்றது.

தீர்த்தவாரி

முன்னதாக மயூரநாதர், ஐயாறப்பர் கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி துலாகட்ட தெற்கு கரையை வந்தடைந்தனர். இதைப்போல வள்ளலார், படித்துறை காசிவிஸ்வநாதர் கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி துலா கட்டத்தை அடைந்தனர்.

மேலும், பரிமளரெங்கநாதர் கோவிலில் இருந்து சுகந்தவனநாதர், பூதேவி, ஸ்ரீதேவியுடன் புறப்பட்டு காவிரி யானைக்கால் படித்துறையை வந்தடைந்தார். பின்னர் துலாகட்டத்தில் 4 கோவில்களின் அஸ்திரதேவர்களுக்கும், யானைக்கால் படித்துறையில் தீர்த்தபேரருக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது.

புனித நீராடினர்

அப்போது துலாகட்டத்தின் வடக்கு கரையில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஆதீனங்களும், கிரீஸ் நாட்டு இளவரசி ஐரீன் ஆகியோரும் புனித நீராடி சாமி வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் புனிதநீராடி சாமி தரிசனம் செய்தனர். மாலை 5 மணியளவில் ஆன்மிக ஊர்வலம் மயிலாடுதுறை கேதாரநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டு காவிரி துலா கட்டத்தை அடைந்தது. இந்த விழா வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது.

இந்த விழாவுக்காக மயிலாடுதுறை துலாகட்ட காவிரியின் மையப்பகுதியில் 100 மீட்டர் நீளம், 17 மீட்டர் அகலத்தில் புஷ்கரணி (தீர்த்தக்குளம்) அமைக்கப்பட்டு உள்ளது. துலாகட்டத்தின் நடுவில் உள்ள ரிஷப நந்திமண்டபம், துலாகட்ட தீர்த்தவாரி மண்டபம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்பட்டது. 

Next Story