டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் இன்று நேரில் ஆஜர் ஆவார்களா?
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் இன்று சபாநாயகர் முன் நேரில் ஆஜராவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை,
அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவளித்து வந்தனர். (ஜக்கையன் மட்டும் அந்த அணியில் இருந்து பிரிந்து சென்றுவிட்டார்). அவர்கள் 19 பேரும் கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி கவர்னரைச் சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
இது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுக்கு எதிராக உள்ளது என்று 19 பேருக்கும் எதிராக சபாநாயகர் ப.தனபாலிடம் அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களுக்கும், சபாநாயகர் ப.தனபால் நோட்டீசு பிறப்பித்தார். இந்த நோட்டீசுக்கு செப்டம்பர் 5-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், 7-ந் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
கோரிக்கை நிராகரிப்பு
இந்த நிலையில், சட்டசபை செயலாளரை 5-ந் தேதியன்று வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட சிலர் வந்து சந்தித்தனர். சபாநாயகர் முன்பு நேரில் ஆஜராவது மற்றும் நோட்டீசுக்கு பதிலளிப்பதற்கு 15 நாட்கள் கூடுதலாக காலஅவகாசம் வேண்டும் என்று மனு கொடுத்தனர். 15 நாட்கள் காலஅவகாசம் கேட்டு 19 பேரும் வைத்த கோரிக்கையை சபாநாயகர் ப.தனபால் நிராகரித்துவிட்டார்.
பின்னர் சபாநாயகர் புதிய நோட்டீசு ஒன்றை 19 பேருக்கும் பிறப்பித்தார். அதில், 14-ந் தேதியன்று தனது முன்பு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், வெற்றிவேல் நேற்று தலைமைச் செயலகத்துக்கு வந்து சபாநாயகர் ப.தனபாலை மீண்டும் சந்தித்தார். இதுபற்றி கேட்டபோது, இது சாதாரண முறையிலான சந்திப்பு என்று கூறப்பட்டது.
ஆனால் அவர் மேலும் காலஅவகாசம் கேட்டதாகவும், அதை சபாநாயகர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வக்கீல்கள் மூலம் அல்லாமல் 18 பேரும் நேரில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றும் கூறப்படுகிறது. எனவே, மைசூரில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களும் சென்னைக்கு வந்து சபாநாயகர் முன்னிலையில் ஆஜராவார்கள் என்று தெரிகிறது.
தகுதி இழப்பு நடவடிக்கை?
அப்படி ஆஜராகாவிட்டால் அவர்கள் மீது தகுதி இழப்பு நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக ஏதாவது ஒரு முடிவை இன்று அவை விதிப்படி சபாநாயகர் எடுப்பார் என்று சட்டசபை வட்டாரம் தெரிவித்தது.
இந்த சூழ்நிலையில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் தலைமைச் செயலகத்துக்கு நேற்று பிற்பகலில் வந்து சபாநாயகர் ப.தனபாலை சந்தித்து பேசினார்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், அவை உரிமைக்குழு நடவடிக்கைக்கு எதிராகவும், அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்குகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
Related Tags :
Next Story