காலக்கெடு முடிந்தது சபாநாயகர் முன் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகவில்லை


காலக்கெடு முடிந்தது சபாநாயகர் முன் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகவில்லை
x
தினத்தந்தி 15 Sep 2017 12:15 AM GMT (Updated: 14 Sep 2017 7:35 PM GMT)

சபாநாயகர் முன் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகவில்லை.

சென்னை,

சபாநாயகர் முன் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகவில்லை. எனவே அவர்கள் மீது தகுதி இழப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்தனர். அவர்கள் 19 பேரும் கடந்த மாதம் 22-ந் தேதி கவர்னரை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்தனர். ஆனால், இது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுக்கு எதிராக உள்ளது என்று 19 பேருக்கும் எதிராக சபாநாயகர் ப.தனபாலிடம் அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் ப.தனபால் நோட்டீஸ் பிறப்பித்தார். இந்த நோட்டீசுக்கு செப்டம்பர் 5-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் 7-ந் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் சட்டசபை செயலாளரை 5-ந் தேதியன்று வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட சிலர் வந்து சந்தித்தனர். சபாநாயகர் முன் எம்.எல்.ஏ.க்கள் நேரில் ஆஜராவது மற்றும் நோட்டீசுக்கு பதில் அளிப்பதற்கு 15 நாட்கள் கூடுதலாக கால அவகாசம் வேண்டும் என்று மனு கொடுத்தனர். ஆனால் 15 நாட்கள் கால அவகாசம் கேட்டு 19 பேரும் வைத்த கோரிக்கையை சபாநாயகர் ப.தனபால் நிராகரித்துவிட்டார்.

பின்னர் சபாநாயகர் புதிய நோட்டீசு ஒன்றை 19 பேருக்கும் பிறப்பித்தார். அதில், 14-ந் தேதியன்று பிற்பகல் 3 முதல் 4 மணிக்குள் தனது முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து ஜக்கையன் விலகினார்.

14-ந் தேதியன்று 19 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராக வேண்டும் என்பதால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு நிலவியது. காலையில் ஜக்கையன் வந்து சபாநாயகர் ப.தனபால் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சிலரது நிர்ப்பந்தம் காரணமாக கவர்னரை சென்று சந்தித்ததாக அவர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியனுடன் வந்து சபாநாயகரை வெற்றிவேல் சந்தித்தார்.

பின்னர் நிருபர்களுக்கு வெற்றிவேல் முன்னிலையில் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் அளித்த பேட்டி வருமாறு:-

18 எம்.எல்.ஏ.க்கள் சார்பாகவும் இடைக்கால பதில் கொடுத்துள்ளோம். எந்த சூழலில், எந்த அடிப்படையில் கவர்னரை பார்த்து கடிதம் கொடுத்துள்ளோம் என்று அதில் விளக்கமாக கூறியுள்ளோம். இதை அவர் ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதே சமயம், சில ஆவணங்களை நாங்கள் கேட்டுள்ளோம். அவற்றை கொடுத்த பிறகு இறுதி பதில் தருகிறோம் என்று கூறியுள்ளோம். விசாரணையின் போது யூகத்தில் பதில் அளிக்க முடியாது என்பதால், அதற்கான ஆவணங்களை கேட்டுள்ளோம்.

இந்த பிரச்சினை வழக்கில் உள்ளது. எனவே இதில் பதில் அளிப்பது சரியாக இருக்காது. சட்டத்திற்கு சம்பந்தப்பட்ட விஷயங்களை சபாநாயகரிடம் கொடுத்துள்ளோம். அவற்றை பரிசீலனை செய்வதாக சபாநாயகர் கூறினார். சபாநாயகர் முடிவில் தலையிடலாம் என்ற கோர்ட்டு உத்தரவுகள் உள்ளன. அவை வழக்குக்கு வழக்கு மாறும்.

முதல்-அமைச்சர் ஒரு ஆவணம் தாக்கல் செய்துள்ளார். அந்த ஆவணம் அவருக்கு எப்படி போனது?. அது தொடர்பான ஆவணங்களையும் எங்களுக்கு தர வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.

எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சிக்கு துரோகம் செய்யவில்லை, கட்சியை விட்டு போகவில்லை, தலைமைக்கு கட்டுப்பட்டுதான் முடிவெடுத்தோம் என்பதை தெரிவித்துள்ளோம். அந்த ஆவணங்களை தந்தால் இறுதி விசாரணைக்கு வந்து ஆஜராக தயாராக இருக்கிறோம்.

தமிழக போலீசாரால் பிரச்சினை உள்ளது. எனவே இங்கு வருவதற்கு கர்நாடக போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்டுள்ளோம். அதை மனுவாக கொடுத்தால் பரிசீலிப்பதாக கூறியுள்ளார். அதை மனுவாகவும் கொடுத்துள்ளோம். யார் மிரட்டினார்கள் என்று கர்நாடக போலீசில் செந்தில் பாலாஜி புகார் கொடுத்திருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களையும் தனது அறைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அழைத்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், அட்வகேட் ஜெனரல் விஜய நாராயண் ஆகியோரை சபாநாயகர் ப.தனபால் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியுடனும் அவர் ஆலோசனை செய்தார்.

இதுபற்றி சட்டசபை வட்டாரத்தில் பேசியபோது, “சபாநாயகரின் முடிவுதான் இறுதியானது. இந்த விஷயத்தில் இதுவரை அவர் முடிவு செய்யவில்லை. அவரது விசாரணை முறை குறித்து யாரும் கருத்துகளை திணிக்க முடியாது. 18 பேரும் விளக்க மனு அளித்துள்ளனர். அனைத்தும் ஒன்றுபோல இருந்தாலும் அனைத்தையும் படித்துப் பார்த்துவிட்டுதான் சபாநாயகர் முடிவு செய்வார்” என்று தெரிவித்தனர்.

சட்ட ரீதியான ஆலோசனை நீண்ட நேரம் நடத்தப்பட்டதால் 18 எம்.எல்.ஏ.க் களும் தகுதி இழப்பு நடவடிக்கைக்கு உள்ளாவார்களா? என்ற பரபரப்பு நேற்று தலைமைச் செயலகத்தில் நிலவியது.

Next Story