14 வயது சிறுமியை சிறைவைத்து 18 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்


14 வயது சிறுமியை சிறைவைத்து 18 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்
x
தினத்தந்தி 16 Sep 2017 10:21 PM GMT (Updated: 16 Sep 2017 10:20 PM GMT)

ஒரு வாரமாக 14 வயது சிறுமியை கடத்தி சிறைவைத்து, 18 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 5 பேர் போலீசிடம் சிக்கியுள்ளனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி கடந்த 9-ந்தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர்.

இந்தநிலையில் மார்த்தாண்டம் அருகே விரிகோடு சாலையில் 4 இளைஞர்களுடன் ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தார். அந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்செல்வதில் அந்த 4 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கும்பலாக சேர்ந்து பாலியல் பலாத்காரம்

உடனே சிறுமியையும், 4 இளைஞர்களையும் மடக்கி பிடித்தனர். இதில் ஒருவர் நைசாக தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து சிறுமி மற்றும் 3 பேரை மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில், காணாமல் போன 14 வயது சிறுமி என்பதும், இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து மார்த்தாண்டம் போலீசார், அந்த சிறுமியை மீட்டு கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சிறை வைத்து, கும்பலாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

காதலனின் நண்பர்கள்

இதையடுத்து அந்த சிறுமி, குளச்சல் மகளிர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டாள். சிறுமியிடம் மகளிர் போலீசார் தீவிர விசாரணையை தொடர்ந்தனர். அப்போது அந்த சிறுமி அப்பாவித்தனமாக தனக்கு நேர்ந்த கொடுமைகளை போலீசாரிடம் கூறி கதறி அழுதுள்ளாள்.

அதாவது அந்த சிறுமிக்கும், ஒரு வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது. அந்த காதலன் மூலம் அவருடைய நண்பர்களாக சிலர் சிறுமிக்கு அறிமுகமானார்கள். இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி காதலன் மற்றும் அவருடைய நண்பர்கள் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி சிறுமி வீட்டை விட்டு சென்றுள்ளார்.

கொடூர சம்பவம்

பிறகு அந்த சிறுமியை குளச்சலில் உள்ள ஒரு விடுதியில் சிறைவைத்து 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மறுநாள் விரிகோடு பகுதியில் ஒருவரின் வீட்டில் அடைத்து வைத்து மேலும் சிலர் சிறுமியை தங்கள் இச்சைக்கு பயன்படுத்தி உள்ளனர். ஒரு தியேட்டருக்கு அழைத்துச்சென்று அங்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் அந்த சிறுமி 18 பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதும் தற்போது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்தநிலையில் நேற்று காலையில் விரிகோடு சாலையில் சிறுமியை வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதில் ஏற்பட்ட தகராறில் தான், 3 பேர் சிக்கி உள்ளனர்.

இந்த கொடூர தகவல்களை போலீஸ் விசாரணையின் போது சிறுமி கூறி இருக்கிறாள்.

5 பேர் சிக்கினர்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதன் மூலம் மேலும் 2 பேர் பிடிபட்டனர். இந்த விவகாரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய மற்றவர்கள் யார்-யார்? என்ற விவரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Next Story