மதுரையில் ஒன்றரை மணி நேரம் கனமழை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் புகுந்த மழைநீர் பக்தர்கள் அவதி
மதுரையில் ஒன்றரை மணி நேரம் கனமழையால் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது பக்தர்கள் அவதியுற்றனர்.
மதுரை,
மதுரையில் 1 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழையால் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
மதுரை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்தியது. வெப்பத்தின் பிடியில் சிக்கித்தவித்த மக்கள் மழை வராதா என்று ஏங்கி தவித்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 6.45 மணி அளவில் மதுரையில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்தது.
கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது. பெரியார் பஸ் நிலையத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
மேலும் கனமழையால் பெரியார் பஸ் நிலையம், எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்த படி சென்றன.
வழக்கமாக மழை பெய்தால் மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ஆடி வீதியில் மழைநீர் தேங்கும். நேற்று ஒன்றரை மணி நேரம் பெய்த கனமழையால் சித்திரை வீதிகளில் தேங்கிய மழைநீர் கோவிலுக்குள் புகுந்தது.
சுவாமி சன்னதி வழியாக கோவிலின் தங்க கொடிமரம் அமைந்துள்ள கம்பத்தடி மண்டபத்தில் புகுந்தது. இதனால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சிரமப்பட்டனர். சிறிது நேரத்தில் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் அந்தப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியிலும் சாரல் மழை பெய்தது.
Related Tags :
Next Story