ரஜினி–கமல் யார் அரசியலுக்கு வந்தாலும் கவலை இல்லை: எல்லா தேர்தல்களிலும் தனித்து போட்டியிடுவோம்
தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது.
சென்னை,
கவர்னருடான சந்திப்புக்கு பிறகு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–கேள்வி:–கவர்னரை திடீரென்று சந்தித்து பேசியிருக்கிறீர்களே?
பதில்:–கவர்னரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். விவசாயிகள் பிரச்சினை, டெங்கு காய்ச்சல் உள்பட தமிழக மக்கள் பிரச்சினைகள் குறித்து மனுவை அளித்து இருக்கிறோம். நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
கேள்வி:–நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கவர்னரை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி இருக்கிறது. இருந்தாலும் நீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறதே?.
பதில்:–நீதிமன்றத்தை மக்கள் தெய்வமாக நினைக்கிறார்கள்.
கேள்வி:–உள்ளாட்சித்தேர்தலில் கூட்டணி வைப்பீர்களா?.பதில்:–கூட்டணி உள்ளிட்ட எல்லா விஷயத்திற்கும் பெரிய கும்பிடு. இனி கூட்டணி கிடையாது. உள்ளாட்சி மட்டுமல்ல எல்லா தேர்தல்களிலும் தனித்து தான் போட்டியிடுவோம்.
கேள்வி:– சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறாரே?
பதில்:– 233 நாள் ஜெயிலில் இருந்திருக்கிறார். தமிழகத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 234. இதை வைத்தே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
கேள்வி:–எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மாணவர்களை அழைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
பதில்:–மாணவர்களை அழைத்து செல்வது தவறு. எம்.ஜி.ஆர். எனக்கு பிடித்த தலைவர். தே.மு.தி.க. சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நாங்கள் கொண்டாட மாட்டோம்.
கேள்வி:–சிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்பு விழாவில் நீங்கள் ஏன் பங்கேற்கவில்லை?.பதில்:–எனக்கு அழைப்பு வரவில்லை. வந்திருந்தால் கலந்து கொண்டு இருப்பேன்.
கேள்வி:–தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ஒட்டு மொத்தமாக அழைப்பு விடுத்தார் என்று கூறப்படுகிறதே?.
பதில்:–எனக்கு தெரியவில்லை. அவர் அழைப்பு விடுத்து இருக்கலாம். நான் பத்திரிகையை பார்க்காமல் இருந்திருக்கலாம்.
கேள்வி:–ரஜினி–கமல் அரசியலுக்கு வருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?. அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று எதிர்ப்பு வருகிறதே?.
பதில்:–ரஜினி–கமல் வரட்டும். யார் வந்தாலும் எனக்கு கவலை இல்லை. எதிர்ப்பு குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். என்னிடம் என் கேட்கிறீர்கள். உங்களுக்கு முன்பு கட்சி தொடங்கிய விஜயகாந்த் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ரஜினி–கமலிடம் போய் கேளுங்கள். இப்படி என்னிடம் தொடர்ந்து நீங்கள் கேட்பது பிடிக்கவில்லை.
கேள்வி:–ஓ.பன்னீர்செல்வம்–எடப்பாடி பழனிசாமி இணைந்த பிறகு எப்படி இருக்கிறது?பதில்:–மிக மோசமாக இருக்கிறது. சினிமாவில் சிவாஜியும், கமலும் நடிப்பில் கிங். அவர்கள் இணைந்து நடிப்பது எப்படி இருக்குமோ, அதைப்போல் அரசியலில் அதை விட பெரிய நடிப்பை அந்த இருவர், பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் காட்டி வருகிறார்கள். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.