அரசு அலட்சியமாக செயல்பட்டால் திமுக தனது தோழமை சக்திகளுடன் களம் காணும்: மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை


அரசு அலட்சியமாக செயல்பட்டால் திமுக தனது தோழமை சக்திகளுடன் களம் காணும்: மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 Oct 2017 1:14 PM IST (Updated: 8 Oct 2017 1:13 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவைபின்பற்றி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டம் கொண்டு வரவேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 

ஆண்டவனின் சன்னதியிலேயே மனிதர்களைப் பிரித்து வைக்கும் போக்கு காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து ஆலயத்தில் அனைவரும் சமம், அனைத்து சமுதாயத்தினரும் கருவறை வரை சென்று வழிபாடு நடத்தும் உரிமையுள்ளவர்கள் என்பதை நிலைநாட்ட, தொடர்ந்து பாடுபட்டு வருகிறது திராவிட இயக்கம். தமிழகத்தில் ஆதிக்கப் பிரிவினரால் இதற்குப் பல தடைகள் உருவாக்கப்பட்ட நிலையில், கேரளாவில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் அற்புதமான திட்டம் செயல்பாட்டுக்கு வருவது, சிந்தைக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக அமைந் துள்ளது.

அங்கே அர்ச்சகர் பணி காலியாக உள்ள 62 இடங்களுக்கு திருவிதாங்கூர் தேவசம் வாரியம் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமித்துள்ளது. இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது பெருமையோடு குறிப்பிடத்தக்கது.
பழங்குடி இனத்தவர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என மொத்தமாக 36 பேர் அர்ச்சகராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். திருவிதாங்கூர் தேவசம் வாரியத்திற்குட்பட்ட அனைத்துக் கோவில்களிலும் இனி இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும், பொதுப்பட்டியலின் வழியாகவும் தகுதி வாய்ந்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் உள்ள மற்ற கோவில்களிலும் இந்த நடைமுறையைப் பின்பற்ற அங்கே ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பினராயி விஜயனின் தலைமையிலான அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் வரவேற்புக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் உரியன.

கடந்த 2006 ஆம் ஆண்டில் 5வது முறையாகத் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பினை தலைவர் கலைஞர் ஏற்றநிலையில், முதல் நடவடிக்கையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கானத் தனிச் சட்டத்தை (ஏசிடி 15 ஆப் 2006) நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, திருவண்ணாமலை, திருவரங்கம் உள்ளிட்ட இடங்களில் சைவ - வைணவ ஆகமப் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டு, அனைத்து சமுதாயங்களையும் சேர்ந்த 207 பேர், உரிய பயிற்சி பெற்று, அர்ச்சகராகும் தகுதியையும், அதற்குரிய பட்டயத்தையும் பெற்றனர்.

வரலாற்றுப் புரட்சியாக நடந்த இந்த மாற்றங்களை ஏற்க இயலாமல், ஒரு சிலர் எதிர்ப்புக்காட்டி உச்ச நீதிமன்றம் வரை சென்று, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்குத் தடையாணை பெற்றனர். இதில் “தமிழ்நாடு அரசின் (தி.மு.கழக அரசின்) அனைத்து ஜாதியினரும், அர்ச்சகராகும் சட்டம் செல்லும்”, என்று  நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அதனை அ.தி.மு.க. அரசு இன்றளவும் கண்டு கொள்ளாத நிலையில் தான், அண்டை மாநிலமான கேரளாவில், தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர் உள்ளிட்ட பிற சமூகங்களைச் சேர்ந்த 62 பேரை அர்ச்சகராக நியமிக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஆகம பயிற்சி பெற்ற அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவதே சமூகநீதியாகும். அதனை நிலைநாட்ட, கேரள அரசிடமிருந்து தமிழக அரசு முற்போக்குப் பாடம் கற்று, உடனடியாகச் செயல்பட வேண்டுமென வலியுறுத்துவதுடன், மாநில அரசு இனியும் அலட்சியமாக செயல்பட்டால் தி.மு.கழகம் தனது தோழமை சக்திகளுடன் களம் காணும் என எச்சரிக்கவும் கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Next Story