ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலா; அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலா; அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 9 Oct 2017 3:15 AM IST (Updated: 9 Oct 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலா என்றும், தனது விருப்பு, வெறுப்புகளை அடக்கிக்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை,

மதுரையில் தனியார் சார்பில் நடந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வை கட்டிக்காப்பது தான் எங்களது பணி. அமைச்சர் என்ற பொறுப்பில், ஒரு முதல்-அமைச்சரின் கீழ் பணியாற்றுகிறேன். எனவே என்னுடைய தனிப்பட்ட எண்ணங்கள் மற்றும் கருத்துகளை வெளிப்படுத்துவது சரியாக இருக்காது. நான் வெறும் ராஜூவாக இருந்தால், வெளிப்படையாக அனைத்தையும் பேசுவேன். அ.தி.மு.க.வை இன்று வழிநடத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் முதல்-அமைச்சருக்கும், துணை முதல்-அமைச்சருக்கும் இருக்கிறது.

எனக்கு எத்தனையோ விருப்பு, வெறுப்புகள் இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு ஜெயலலிதாவின் உண்மையான பிள்ளையாக இருக்கிறேன். இந்த நேரத்தில் அமைதியாக கட்சியை வழிநடத்த வேண்டும். இது தான் என்னுடைய கருத்து. என்னை பொறுத்தவரை, ஜெயலலிதா ஆட்சி அமைவதற்கு சசிகலா பாடுபட்டு இருக்கிறார். அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. அந்த கருத்தை மாற்றிக்கொள்பவனும் நான் இல்லை. இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் எடுக்கின்ற நடவடிக்கைக்கு என்னுடைய கருத்துகள் பாதகமாக எந்த வகையிலும் இருக்கக்கூடாது.

அ.தி.மு.க.வை கூறு போட வேண்டும் என்று கருணாநிதி வழியில் அவரது மகன் ஸ்டாலினும் புறப்பட்டு இருக்கிறார். அ.தி.மு.க.வில் இருக்கிற 1½ கோடி தொண்டர்களும் ஒரு குடையில் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. டெங்கு நோயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி இருக்கிறார். இலவசமாக டெங்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. டெங்கு பரவும் வேகத்தை விட, சுனாமி வேகத்தில் அதனை கட்டுப்படுத்த அரசு முழு வீச்சில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

டெங்குவை விட மோசமானது தி.மு.க.. அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்கள் பணி செய்வார்கள். ஆளுங்கட்சி ஆனவுடன் மக்களை மறந்து விடுவார்கள். அப்படிப்பட்ட தி.மு.க. இனி வரக்கூடாது. ஜெயலலிதாவின் எண்ணப்படி, 100 ஆண்டுகள் தொடர்ந்து நல்லாட்சி தருவோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள் சசிகலா, டி.டி.வி.தினகரன் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லூர் ராஜூ, “ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதில் சொல்வேன். மற்ற கேள்விகளை கேட்காதீர்கள்” என்றார்.

அதே போல் சசிகலா குறித்து செல்லூர் ராஜூ கூறும்போது, ‘முதலில் சின்னம்மா என்றும், பின்னர் மாண்புமிகு சின்னம்மா’ என்றும் கூறினார்.

Next Story