கம்போடியாவில் இறந்த ரவுடி ஸ்ரீதரின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை
கம்போடியாவில் மர்மமான முறையில் இறந்த ரவுடி ஸ்ரீதரின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காஞ்சீபுரம் கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
ரவுடி ஸ்ரீதர் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார். கடந்த 4–ந் தேதி அவர் மர்மமான முறையில் கம்போடியாவில் இறந்தார். அவரது உடல் அங்குள்ள ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
ரவுடி ஸ்ரீதரின் மகள் தனலட்சுமி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
என் தந்தை மீது காஞ்சீபுரம் போலீசார் ஏராளமான வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் அவரை தேடப்படும் குற்றவாளியாக காஞ்சீபுரம் கோர்ட்டு அறிவித்து உள்ளது. என் தந்தையை கைது செய்ய தமிழக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். அவரது பாஸ்போர்ட்டை மத்திய அமலாக்கப்பிரிவு முடக்கி உள்ளது.
கடந்த 4–ந் தேதி இங்கிலாந்தில் படித்துவரும் எனது சகோதரன் சந்தோஷ் எனக்கு போன் செய்து, ‘நம் தந்தை கம்போடியா நாட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்’ என்று கூறினான். இதையடுத்து நான் கம்போடியா நாட்டுக்கு விரைந்தேன். என் தந்தைக்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரி நிர்வாகம் மாரடைப்பு காரணமாக என் தந்தை இறந்துவிட்டதாக சான்றிதழ் கொடுத்துள்ளது.
என் தந்தையின் பெயரில் உள்ள பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கியுள்ளதால், கம்போடியா நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகி என் தந்தையின் உடலை இந்தியாவுக்கு எடுத்துச்செல்ல உதவுமாறு கோரிக்கை விடுத்தேன். ஆனால் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு இதுகுறித்து கோரிக்கை கடிதம் அனுப்பினால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று தூதரக அதிகாரிகள் கூறிவிட்டனர்.
என் தந்தையின் உடலை அடக்கம் செய்வதற்காக இந்தியாவுக்கு கொண்டுவர தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக நேற்று மாலை நீதிபதி எம்.ரமேஷ் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். ஸ்ரீதரின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.